சைவத் தமிழர்களுக்கென்று தனி அடையாளமொன்றை பெற்றுத் தந்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் விழாவும் குருபூஜையும் சேர்ந்த நிகழ்வுகள் இன்று யாழில் நடைபெற்றுள்ளது.
பெருமைமிகு பெருமானின் 142 ஆவது குருபூஜை நன்னாளை இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் நாடளாவிய ரீதியிலே அனுஸ்டிப்பதற்கு ஏற்பாடுகள் செய்திருந்தது.
இந்த நிலையில், இன்று சனிக்கிழமை காலை 8.00 மணியளவில் குறித்த குருபூஜை வழிபாடுகள் ஆறுமுகநாவலர் மணிமண்டபத்தில் இடம்பெற்றது.
மேலும், யாழ்பாணத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆறுமுகநாவலரின் நினைவரங்கம் யாழ் கலாச்சார மண்டபத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வடக்கு – கிழக்கு மலையகம் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் குருபூஜை நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளை இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






