உடைப்பெடுக்கும் அபாயத்தில் தாமரைக் குளம்

புத்தளம் – வண்ணாத்திவில்லு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பழைய எலுவான்குளம் கிராமத்தில் உள்ள தாமரைக் குளத்தின் பல இடங்களில் கசிவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அக்குளம் உடைப்பெடுக்கும் அபாயத்தில் உள்ளதாக விவசாயிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இக்குளத்தின் கசிவை மண் மூடைகளையிட்டு சிரமதானப் பணி மூலம் இன்று சீர் செய்த போதிலும் அது உடைப்பெடுப்பற்கான அறிகுறிகள் காணப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த குளம் சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டதாகும். இந்த குளம் உடைப்பெடுக்கும் பட்சத்தில் குளத்தை அண்டி வாழும் சுமார் 150 குடும்பங்களும் பாதிக்கப்படுவதுடன், சுமார் 750 ஏக்கருக்கும் அதிகமான வேளாண்மைச் செய்கையும் பாதிக்கப்படும் எனவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

தாங்கள் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதுடன், கடன்களைப் பெற்று விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவும், இக்குளம் உடைப்பெடுத்து தமது வேளாண்மை பாதிக்கப்பட்டால் அதனை எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

எனவே இக்குளத்தில் ஏற்பட்டுள்ள கசிவை சீர் செய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலும் அவர்கள் கோரிக்கை விடுகின்றனர்.

Leave a Reply