வடக்கு மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் சொல்லி சொல்லி அலுத்து விட்டது,ஆகவே போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என ,யாழ் மாவட்ட கடல்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அ. அன்னராசா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:
சட்டவிரோத தொழில்களை நிறுத்துமாறு பலமுறை நாம் கோரிக்கை விடுத்துள்ளோம்.இதன் விளைவாக கடந்த 3 ஆம் திகதி முதல் இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுடைய போராட்டம் இறுதியில் குழப்பத்தில் நிறைவடைந்தது.அந்த போராட்டம் நியாயமானது . மீனவர்களின் பிரச்சினைகள் கடந்த பத்து வருடங்களாக தொடர்கிறது.
இந்த நிலையில் கொழும்பில் இருந்து வந்த அதிகாரிகளை சந்தித்து விசாரித்து அவர்களுக்கான முடிவை
நாளைய தினம் அல்லது நாளைய மறுதினம் வழங்குவதாக உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.மீனவர்களுடைய நியாயமான கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காத பட்சத்திலேயே வடமாகாண ரீதியில், அனைத்து மீனவ அமைப்புக்களும் ஒன்றிணைந்து, வடக்கு கடலில் சட்ட விரோத தொழில்களை கட்டுப்படுத்தும் வகையில் வீதியில் இறங்கிப் போராடும் நிலை ஏற்படும்.
தடை செய்யப்பட்ட சுருக்கு வலை தொடர்பான பிரச்சனை முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. சுருக்கு வலைகளை தடை செய்யும் பதிவுகள் ,அரச சுற்று நிருபங்களிலும் சட்டத்திலும் இருக்கின்றது.ஆகவே தான் அதை கட்டுப்படுத்துமாறு கோருகின்றோம்.
சுருக்கு வலை தொடர்பாக அங்கீகரிக்கப்படட விதிமுறைகளுக்கு ஏற்ப செயற்பட வேண்டும் .சுருக்கு வலை தொழிலை செய்வதற்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. கரையில் இருந்து 10 கடல் மைல் தூரத்தில் செய்யப்பட வேண்டிய சுருக்கு வலை, இரவில் சட்ட விரோதமாக வெளிச்சம் பாய்ச்சி டைனமட் மூலம் தொழில் செய்வது குற்றமாகும். அத்துடன் சுருக்கு வலையில் அங்கீகரிக்கப்பட்ட மீனங்களை தவிர பாரம்பரிய மீனங்களை தான் இவர்கள் பிடிக்கின்றனர் என்றார்.
பிற செய்திகள்

