ஒற்றுமை முயற்சிக்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்! மாவையின் கருத்தை ஏற்று சித்தார்த்தன் அறைகூவல்

தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகளின் ஒற்றுமை முயற்சிக்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான புளொட்டின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் தலைமைகளின் ஒற்றுமை முயற்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தலைமை தாங்க வேண்டும் எனத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே சித்தார்த்தன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாம் தொடர்ச்சியாக அரசியல் தலைமைகளின் ஒற்றுமைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம். தனிப்பட்ட ரீதியாகவும் மற்றவர்களுடன் பேசி பல முயற்சிகளை எடுத்து வருகின்றோம். இது ஒரு தனி மனிதன் செய்யக்கூடிய விடயமல்ல. அன்று இருந்த அரசியலுக்கும் இன்றுள்ள அரசியலுக்கும் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன.

ஆனால், எல்லோருமாக ஒற்றிணைந்து ஒற்றுமை முயற்சியை முன்னெடுத்து எல்லா கட்சிகளின் மத்தியிலும் ஓர் ஒற்றுமையை ஏற்படுத்தி முதலில் ஆகக் குறைந்தது தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அனைத்துக் கட்சிகளும் நாங்கள் ஒற்றுமைப்பட்டு ஒன்றுபடுவோமாக இருந்தால் அடுத்தகட்டமாக ஒரு பலமான தேசிய அரசியல் அமைப்பாக வந்து தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை முன்னெடுப்பதற்கு வசதியாக இருக்கும்.

ஆகவே, மாவை, சுரேஷ், செல்வம் போன்ற அனைவரும் இணைந்து இந்த முயற்சியை எடுக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை” – என்றார்.

அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவை அதிகரிக்குமாறு கோரி புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்!

Leave a Reply