சிலிண்டர் வெடிப்பு விவகாரம்: பொய் சொன்ன அதிகாரிகளை கைது செய்க

சமையல் எரிவாயு சிலிண்டரின் தர நிர்ணயம் உறுதி செய்யப்படவில்லை என கூறுவதை ஏற்க முடியாது என்று தெரிவித்த எதிர்க்கட்சி எம்.பி முஜிபூர் ரஹ்மான், இதற்குப் பொறுப்புக்கூற வேண்டிய அனைத்து அதிகாரிகளையும் சி.ஐ.டியினர் கைது செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன பாராளுமன்றத்தில் விளக்கமளித்தபோது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

சிலிண்டரின் கலவையின் அளவில் மாற்றம் செய்திருப்பது தொடர்பில் தர நிர்ணய நிறுவனங்கள் உறுதிசெய்யவில்லை இராஜாங்க அமைச்சர் கூறுகிறார்.

ஆனால், 12.5 கிலோ கிராம் சிலிண்டரில் இருக்கவேண்டிய இரசாயன அளவு தொடர்பாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளர் அனில் கொஸ்வத்த, நுகர்வோர் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்துக்கு அனுப்பி இருக்கும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதில் புறொபேன் 20 சதவீதமும் பியூட்டேன் 80 சதவீதமும் இருக்கவேண்டும் தெரிவித்திருக்கிறார் எனவும் கூறினார்.

நுகர்வோர் அதிகாரசபையால் இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் இரசாயன கூறுகள் இரண்டும் 50:50 என உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் இருந்து இதன் அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை இதனூடாக உறுதியாகிறது என்றார்.

இதுவொரு பாரிய மோசடி, அரசாங்கம் மக்களின் உயிருடன் விளையாடுகிறது.

சிலிண்டர் தொடர்பில் போலியான தகவல்களை வெளியிடும் அதிகாரிகள் சி.ஐ.டியினர் கைது செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அளவையில் மாற்றம் ஏற்பட்டிருப்பது உறுதியாகி இருக்கின்றது. அதனால் அதிகாரிகள் ஊடகங்களுக்கு முன்வந்து இதுதொடர்பாக பொய் தகவல்களை வெளியிடுவதை நிறுத்தவேண்டும்.

அவர்களை குற்றப்புலனாய்வு பிரிவு கைதுசெய்யவேண்டும். ஏனெனில், இவர்கள் மக்களின் உயிருடன் விளையாடுகின்றனர் என்றார்.

Leave a Reply