திருமலை எண்ணெய் குதம் குறித்து அரசின் நிலைப்பாடு என்ன? பாராளுமன்றத்தில் ஐ.ம.ச கேள்வி

திருகோணமலை எண்ணெய் குதங்களை மீளப் பெற்றுக்கொள்வதாக அரசு தெரிவித்தபோதும் இதுவரை பெற்றுக்கொள்ளவில்லை. அப்படியானால் திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்ன?

சீனா, அமெரிக்காவுக்கு நாட்டின் ஏனையவளங்களை வழங்கியுள்ளது போல் இந்திய அரசுடன் இது தொடர்பில் வேறு ஏதாவது ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் அரசாங்கம் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான கபீர் ஹாசிம் வலுறுத்தினார்

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற மின்சக்தி அமைச்சு, வலுசக்தி அமைச்சு ஆகியவற்றின் நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு வலியுறுத்தினார்.

அவர் மேலும் கூறுகையில்,

இந்தியாவுக்கு வழங்கி இருக்கும் திருகோணமலை எண்ணெய்க் குதங்களை மீளப் பெற்றுக் கொள்வதாக அரசு தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்திருந்தது.

ஆனால் தற்போது எமது அரசின் காலத்தில் மேற்கொண்ட ஒப்பந்தம் காரணமாக அதனை மீளப்பெற முடியாதுள்ளதாக தெரிவித்து, அதனை தட்டிக்கழித்து வருகிறது.

எமது அரசின் காலத்தில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இந்தியாவுடன் அது தொடர்பில் புரிந்துணர்வு கடிதப் பரிமாற்றங்களே நடைபெற்றுள்ளன.

எந்தவித ஒப்பந்தமும் எமது அரசு செய்யவில்லை.எனவே இந்த அரசு அவற்றை மீளப்பெற்றுக் கொள்வதற்கு எமது அரசின்கால புரிந்துணர்வு கடிதப் பரிமாற்றங்கள் எந்தவித தடையையும் ஏற்படுத்தப் போவதில்லை.

தற்போதைய அரசு கூறுவதுபோல் எமது அரசும் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் கீழ்மேற்படி எண்ணெய்க் குதங்களை வழங்கவில்லை.

மஹிந்த ராஜபக்ஷ அரசுகொழும்பு துறைமுக நகர நிலத்தை சீனாவுக்கு உரித்துரிமையாக வழங்கி இருந்தது. அந்த உரித்துரிமையை இல்லாமலாக்குவதாக நாங்கள் அன்று வாக்குறுதி அளித்தோம்.

அதேபோன்று ஆட்சிக்குவந்ததுடன் சீனாவுடன் மோதி, துறைமுக நகரின் உரித்துரிமையை இல்லாமலாக்கி குத்தகைக்கு வழங்க நடவடிக்கை எடுத்தோம்.

ஆனால் இந்த அரசு திருகோணமலை எண்ணெய் குதங்களை மீளப் பெற்றுக்கொள்வதாக தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்த போதும் இதுவரை அவற்றை பெற்றுக்கொள்ளாமல் இருக்கின்றது.

அப்படியானால் திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்ன ? சீனா, அமெரிக்காவுக்கு நாட்டின் ஏனைய வளங்களை வழங்கியுள்ளது போல் இந்திய அரசுடன் அதுதொடர்பில் வேறு ஏதாவது ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் அரசு நாட்டுக்கும் மக்களுக்கும் வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

இதேவேளை, 27ஆம் திகதி மாவீரர்தின நிகழ்வுகளை செய்ய முற்பட்டபோது, சப்பாத்து கால்களுடன் இராணுவத்தினர் துயிலும் இல்லங்களில் மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதுடன், அங்கு முகாம்களையும் அமைத்துள்ளனர்.

அங்கிருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். மன்னாரில் எரிசக்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் நாட்டின் கடனை அடைக்க முடியும் என்ற கருத்து வலுசக்தி அமைச்சரால் வெளியிடப்பட்டுள்ளது. அது நல்ல விடயமே.

எங்களின் தேசத்தில் கண்டுபிடிக்கப்படும் வளங்கள்மூலம் கிடைக்கும் வருமானம், எங்கள் தேசத்தின் பொருளாதார அபிவிருத்திக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும்.

எமது மக்கள் புறக்கணிக்கப்படுகின்ற நிலைமை தொடரக்கூடாது. இல்மனைட் அகழப்படுகின்றது. அதனால்கிடைக்கும் வருமானம் முழுவதும் அந்தப் பிரதேசங்களுக்கு வெளியே கொண்டு
செல்லப்படுகின்றது.

இந்த நிலைமை தேசங்களுக்கு இடையே இடைவெளியையே அதிகரிக்கும்.காற்றாலை மின் உற்பத்தியிலும் வேலைவாய்ப்புகள் அந்தப் பிரதேசங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளிக்கும் முகமாக இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸநாயக்க கூறுகையில்,

இந்த நாட்டில் உள்ள வளங்கள் நாட்டு மக்களுக்கே உரியது. பிரதேசங்கள் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் இனம், பிரதேச அடிப்படையில் ஒதுக்கமுடியாது.

அந்தப் பிரதேசத்திற்கு விசேட அந்தஸ்து வழங்குவது குறித்து அனைவரும் கலந்துரையாடி இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஆனால், பிரதேச அடிப்படையில் அவற்றை ஒதுக்க முடியாது இதனை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் – என்றார்.

Leave a Reply