முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு சொந்தமான இரட்டைவாய்க்கால் சந்தியில் இருந்து சாலை வரையான பதின்மூன்று கிலோமீற்றர் வீதியை புனரமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
குறித்த வீதியானது மிக நீண்டகாலமாக புனரமைக்கப்படாமையால், பொதுமக்கள், விவசாயிகள், மீனவர்கள், பாடசாலை மாணவர்கள் என அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக மாத்தளன், அம்பலவன் பொக்கணை, வலைஞர்மடம் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் சுமார் 400 குடும்பங்களை சேர்ந்தவர்கள் மாத்திரமின்றி, விவசாய மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு செல்லும் பலரும் பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்கின்றனர். பாடசாலை மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்
மேலும், வீதியால் பேருந்து சேவைகள் இடம்பெறுவதில்லை. இதனால் தமது நிர்வாக நடவடிக்கைகள் அனைத்துக்கும் முல்லைத்தீவு நகருக்கு செல்லவேண்டிய இவ் வீதியில் வசிக்கும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்
குறித்த வீதி பாரிய குன்றும் குழியுமாக காணப்படுவதோடு, மழைக்காலங்களில் வீதி பாவிக்கமுடியாத அளவுக்கு நீர் நிரம்பி தடைப்படுவதும் வழமையாகியுள்ளது. முல்லைத்தீவுக்கு இவ் வீதியூடாக செல்லவேண்டிய மக்கள் சுமார் இருப்பது கிலோமீற்றர் சுற்றி புதுக்குடியிருப்பு ஊடாக செல்லுகின்ற நிலை காணப்படுகின்றது.
யுத்தத்துக்கு முன்னரும் சரி யுத்தத்துக்கு பின்னரும் சரி இந்தவீதியூடாக பயணிக்கமுடியாத நிலை காணப்படுகிறது. இந்த வீதிதொடர்பில் பல ஆண்டுகளாக குரல்கொடுத்தும் தமக்கு எந்தவிதமான தீர்வுகளும் வழங்கப்படவில்லை.
பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள், விவசாயிகள் மீனவர்கள் தமது செயற்பாடுகளை செவ்வனே செய்ய குறித்த வீதியை மிக விரைவில் புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் கரிக்கட்டுமூலை வடக்கு வட்டார உறுப்பினர் இ.கஜிதரனும் கோரிக்கை விடுத்துள்ளார்.








