வடக்கில் தனியார் காணிகளை கடற்படையினருக்கு சுவீகரிக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துவரும் நிலையில், அந்தக் காணிகளை படைப்படையினருக்குப் பெற்றுக் கொடுப்பதில் வடக்கு ஆளுநர் மும்முரமாக செயற்பட்டு வருகின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடற்படையினருக்கு காணி அளக்க முற்பட்டவேளை தடுத்தி நிறுத்தியமையால் உரிமையாளர்களை தனியாக இன்று அழைத்து ஒப்புதல் பெறுவதற்கு வடக்கு ஆளுநர் முயற்சி செய்துள்ளார்.
சண்டிலிப்பாய் பிரதேச சபைக்கு உட்பட்ட மாதகல் பகுதியில் கடற்படையினருக்கு நிலம் சுவீகரிக்கும் நோக்கில் 3 நாடகள் அளவீடு செய்ய முற்பட்டசமயம் மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளால் தடுத்து நிறுத்தப்பட்டதோடு தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள கீரிமலைப் பிரதேசத்திலும் இதே நிலமையே காணப்பட்டது.
இதனால், அளவீடு செய்யும் தினம் தொடர்பான தகவல் வழங்கிவிட்டுச் செல்வதனாலேயே உரிமையாளர்களும் அரசியல்வாதிகளும் கூடி எதிர்ப்புத் தெரிவிப்பதால் இனிவரும் நாட்களில் முட்கூட்டிய அறிவிப்பு இன்றி இரகசியமாக அளவீடு செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றது.
இதேநேரம், இதன் முதல் கட்டமாக வடக்கு ஆளுநர் பதவி ஏற்றதன் பின்பு, இதுவரை அளவீடு செய்ய முற்பட்ட சமயம் தடுத்து நிறுத்தப்பட்ட 4 கடற்படை முகாம்களில் இனங்காணப்பட்ட 16 காணி உரிமையாளர்களையும் இன்று 2 மணிக்கு தனது அலுவலகத்திற்கு அழைத்துள்ள ஆளுநர் இழப்பீட்டுடன் அந்த நிலங்களை விடுவிக்க சம்மதம் கோரும் முயற்சியில் ஈடுபடவுள்ளார்.
அந்த முயற்சி வெற்றியளிக்காத நிலைமை காணப்பட்டால் இனிவரும் நாட்களில் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளும் சட்டப்படி அன்றி இரகசியமாக மேற்கொள்ளவே திட்டமிடப்படுகின்றது.
இதனால் இன்றைய கூட்டத்திற்கு இந்த ஆளுநரை நம்பி எவ்வாறு செல்வது என ஒரு நில உரிமையாளர் கூறியதோடு, தற்போது ஆளுநர் மேற்கொள்ளும் நடவடிக்கை எமது நிலங்களை சுவீகரித்து படையினருக்கு தாரை வார்க்க முயல்வது அப்பட்டமாக தெரிகின்றது.
இவ்வாறு ஒரு நிலைமை ஏற்படுமாக இருந்தால் ஆளுநர் செயலகத்தில் இருக்கும் நாளில் இருந்து காணி உரிமையாளர்கள் அவரது அலுவலகத்தின் இரு வாசல்கதவையும் மூடி இரவுபகலாக சத்தியாக் கிரகம் இருந்து ஆளுநரை அவரது அலுவலகத்திற்குள்ளேயே தனிமைப்படுத்தி சிறை வைக்கும் நிலமையே ஏற்படும்போல் தோன்றுகின்றது என தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.






