புத்தளம் எரிவாயு ஆலையில் வெடிப்பு; இருவர் வைத்தியசாலையில்..! நான்கு இடங்களில் இடம்பெற்ற சம்பங்களின் முழுவிபரம்

புத்தளத்தில் எரிவாயு ஆலையொன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில், இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நைனாமடம பகுதியிலுள்ள எரிவாயு ஆலை ஒன்றிலேயே இவ்விபத்து இடம்பெறுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் நேற்று (30) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில், 40 வயது மற்றும் 24 வயதுடைய இருவர் காயமடைந்த நிலையில் நீர்கொழும்பு ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆபத்தான நிலையில் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மோட்டார் வாகனங்களுக்காக பயன்படுத்தப்படும் குளிரூட்டிகளைப் புதுப்பிக்கும் இடத்தில், குறித்த இருவரும் அங்கு வேலை செய்து கொண்டிருந்த போதே இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, குளிரூட்டலுக்கு பயன்படுத்தப்படும் 5 அடி உயர நைட்ரஜன் அடங்கிய சிலிண்டரில் பொருத்தப்பட்டிருந்த குழாயே இவ்வாறு வெடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வட்டுக்கோட்டையில் எரிவாயு அடுப்பு வெடித்தது!

வட்டுக்கோட்டையில் வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது.

வட்டுக்கோட்டை காளி கோவிலடியில் இன்று புதன்கிழமை (01) முற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கண்ணாடி பொருத்தப்பட்ட எரிவாயு அடுப்பே வெடித்துச் சிதறியுள்ளது.

எனினும், வேறு சேதங்கள் எவையும் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

தலவாக்கலையிலும் வெடித்தது!

தலவாக்கலை – மேல் கொத்மலை புதிய வீட்டுத் தொகுதியில் சமையல் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துள்ளது.

இந்த சம்பவம் இன்று (1) காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தேநீர் தயாரிப்பதற்காக அடுப்பை பற்ற வைத்த பின்பு அதனை நிறுத்தி விட்டு, வெளியில் சென்ற ஒரு நொடியிலேயே, இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பிலும் அடுப்பு வெடித்துச் சிதறிய சம்பவம்!

மட்டக்களப்பு திராய்மடு சுவிஸ் கிராமம் பகுதியில் இன்று காலை எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறியுள்ளது.

இன்று காலை 10 மணியளவில் தேனிர் தயாரிப்பதாற்காக எரிவாயு அடுப்பினை செயல்படுத்திய போது குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எரிவாயு அடுப்பினை செயற்படுத்தி விட்டு வெளியில் வந்து உறவினர்களிடம் கதைத்துக் கொண்டிருந்த வேளை அவர்களது சமையலறையில் வெடிப்புச் சம்பவம் இடம்பெறுள்ளது.

இதையடுத்து அங்கு போய் பார்வையிட்டபோது குறித்த எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சுன்னாகம் கந்தரோடையில் உள்ள வீடொன்றில் இதேபோன்ற சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply