
அஜித் நடிப்பில் உருவாகிவரும் 60வது படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவருகிறது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து முதல் சிங்கிள் வெளியாகி டிரெண்டாகிவருகிறது.
வலிமை படத்தை அக்டோபரில் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறது. அதனால், உடனடியாக ரஷ்யா சென்று இறுதிக்கட்ட ஷூட்டிங்கை முடித்துவிடும் திட்டத்தில் இருக்கிறது படக்குழு.
இந்நிலையில், அஜித்தின் 61வது படத்தை ஹெச்.வினோத் இயக்க போனிகபூர் தயாரிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இதற்கு நடுவே, சில மாதங்கள் அஜித் ஓய்வு எடுக்கப் போவதாகவும் தகவல்.
வலிமை படத்தின் போதே விபத்துகளைச் சந்தித்தார் அஜித். மருத்துவ சிகிச்சையும் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் உடல் ரீதியாக ஓய்வு தேவைப்படுகிறதாம். அதனால், ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடம் வரை ஓய்வெடுக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அஜித் 61வது படமானது ஷார்ட் டைமில் எடுக்கும் கதையாம். வலிமை மாதிரி நிறைய லொக்கேஷன், மிகப்பெரிய கதையாக இருக்காது என்கிறார்கள். அதனால், அஜித் 61 முடித்துவிட்டு ஓய்வெடுக்கப் போகிறாரா, அல்லது ஓய்வுக்குப் பிறகு துவங்குமா என்பது உறுதியாகவில்லை.
அதோடு, அஜித் 62 படம்குறித்த தகவலும் தெரியவந்துள்ளது. அஜித்தின் 62வது படத்தை தயாரிக்க சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் உறுதியாகியிருக்காம். ஏற்கெனவே, அஜித் நடிக்க விஸ்வாசம் படத்தை தயாரித்தது. அதோடு, தனுஷுன் மாறன் படத்தைத் தயாரித்துவருகிறது .
இந்தப் படத்தின் இயக்குநர் யாரென்பது மட்டும் உறுதியாகவில்லையாம். அஜித்துக்கு கதைக் கூறிவிட்டுக் காத்திருக்கும் இயக்குநர்களில் முன்னணியில் இருப்பவர் சுதா கொங்கரா. ஆக, சுதா கொங்கரா இயக்க அஜித் நடிக்கும் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க அதிக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
தற்பொழுது, சூரரைப் போற்று இந்தி ரீமேக்கிற்கான வேலைகளைத் துவங்கியிருக்கிறார் சுதா கொங்கரா. இந்தி வெர்ஷனை சுதா முடித்துவிட்டு வரவும், அஜித் 61 முடிக்கவும் சரியாக இருக்கும் என்றே கணிக்கப்படுகிறது.