உலகிலேயே செலவு குறைந்த நகரங்களில் கொழும்பு இடம்பிடித்துள்ளது.
வருடாந்த Economist Intelligence Unit (EIU) கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் பெங்களூர் மற்றும் அல்ஜீரியாவின் தலைநகரான அல்ஜியர்ஸுடன் உலக வாழ்க்கைச் செலவுக் குறியீட்டில் கொழும்பு 161ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
EIU இன் உலக வாழ்க்கைச் செலவுக் குறியீட்டின்படி, இந்தியாவின் சென்னை மற்றும் அகமதாபாத் நகரங்கள் கொழும்பிற்குக் கீழே தரவரிசையில் உள்ளன.
அதே நேரத்தில் ஈரானின் தலைநகர், தெஹ்ரான், லிபியத் தலைநகர், திரிபோலி மற்றும் சிரியாவின் டமாஸ்கஸ் ஆகியவை உலகின் மலிவான நகரங்களாக உள்ளன.
இதற்கிடையில், உலகின் மிக விலையுயர்ந்த நகரங்கள் கூட்டாக நியூயோர்க் மற்றும் சிங்கப்பூர் என வருடாந்த பொருளாதார புலனாய்வு பிரிவு (EIU) கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
தரவரிசையில் நியூயோர்க் முதலிடம் பிடித்தது இதுவே முதல்முறை. கடந்தாண்டு முதல் இடத்தில் இருந்த டெல் அவிவ் இப்போது மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, உலகின் பெரிய நகரங்களில் சராசரி வாழ்க்கைச் செலவு இந்தாண்டு 8.1% அதிகரித்துள்ளது என EIU கணக்கெடுப்பு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
உக்ரைனில் நடந்த போர் மற்றும் விநியோகச் சங்கிலிகளில் கொவிட் தாக்கம் ஆகியவை அதிகரிப்புக்குப் பின்னால் உள்ள காரணிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் உயர் பணவீக்கம் நியூயோர்க் பட்டியலில் முதலிடத்திற்கு ஒரு காரணம்.
லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சான் பிரான்சிஸ்கோவும் முதல் 10 இடங்களைப் பிடித்தன – இந்த ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்க பணவீக்கம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக உயர்ந்தது.
டொலர் வலுவடைவதும் அமெரிக்க நகரங்களின் முக்கியத்துவத்திற்கு ஒரு காரணியாக இருந்தது.
மொஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஆகியவை தரவரிசையில் 88 மற்றும் 70 இடங்கள் முன்னேறி முறையே 37 மற்றும் 73 ஆவது இடங்களுக்கு வந்தன, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து மேற்கத்திய பொருளாதாரத் தடைகளின் விளைவாக வந்தன.





