கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட வீதிகள் மற்றும் உட்புற வீதிகளில் குடிநீர் இணைப்பு வழங்குவதற்காகத் தோண்டப்படும் குழிகள் முறையாக மூடிச் சீரமைக்கப்படாமல் விடப்படுவதனால், வீதிகள் முழுமையாக நாசமடையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குடிநீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரால் அல்லது தனியார் தேவைப்பாடுகளுக்காக வீதிகளை வெட்டி நீர் இணைப்புகள் பெறப்பட்ட பின்னர், தோண்டப்பட்ட இடங்கள் முறையாகக் காப்பரண் செய்யப்பட்டுத் தார் அல்லது கொங்கிரீட் இடப்பட்டுச் சீரமைக்கப்படுவதில்லை எனப் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
குறிப்பாகக் கல்முனை மாநகரப் பகுதியில் தோண்டப்பட்ட சிறிய குழிகள், மழைநீர் தேங்குவதனாலும் வாகனப் போக்குவரத்தினாலும் நாளடைவில் பெரிதாகி முழு வீதியையும் சீரழிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.இதேபோன்றே பல முக்கிய வீதிகள் நீர் இணைப்புகளுக்காக தோண்டப்பட்டுப் பின்னர் சீரமைக்கப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் உடைந்து காணப்படுகின்றன. இதனால் பாதசாரிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவதுடன், இரவு வேளைகளில் பாரிய விபத்துக்கள் சம்பவிக்கும் அபாயமும் நிலவுகிறது.
மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்படும் பொது வீதிகள் இவ்வாறான அலட்சியப் போக்கினால் பாழடைவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோருகின்றனர்.நீர் இணைப்புகளை வழங்க அனுமதி அளிக்கும் உள்ளூராட்சி மன்றங்களும் (மாநகர சபை/பிரதேச சபைகள்) மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையும் உடனடியாகத் தலையிட்டு, தோண்டப்படும் வீதிகளை ஒப்பந்தக்காரர்கள் அல்லது உரிய தரப்பினர் உடனடியாகப் பழைய நிலைக்குச் சீரமைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.





