இலங்கையில் ஊழலைத் தடுக்கும் நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில், தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நாடாளுமன்றத்தில் 13 உறுப்பினர்களைக் கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
2025–2029 தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டத்தின் கீழ் நாடாளுமன்றத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகளை நடைமுறைப்படுத்துதல்,
அவற்றைக் கண்காணித்தல் மற்றும் தேவையான தலைமைத்துவத்தை வழங்குதல் ஆகிய நோக்கங்களுக்காக இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரின் தலைமையில் குறித்த விசேட குழு செயற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமையவே இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (20) நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளார்.
விசேட குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள்:
அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பிரதியமைச்சர்களான சுனில் வடகல, கௌசல்யா ஆரியரத்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜே.சி. அலவத்துவல, அனுராத ஜயரத்ன, சாணக்கியன் இராசமாணிக்கம், ஓஷனி உமங்கா, பிரகீத் மதுரங்க, சந்திமா ஹெட்டியாரச்சி, தர்மப்பிரிய விஜேசிங்க, தேவானந்த சுரவீர மற்றும் எம். நிஸாம் காரியப்பர் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டத்தின் கீழ் நாடாளுமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ள பணிகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துவதில் இந்த விசேட குழு முக்கிய பங்காற்றவுள்ளது.





