பெர்த், டிச 04
ஆஸ்திரேலியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நடந்து வருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 598 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. மார்னஸ் லபுஸ்சேன், ஸ்டீவன் சுமித் இரட்டை சதம் அடித்தனர்.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 283 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனை அடுத்து வெஸ்ட்இண்டீசுக்கு பாலோ-ஆன் வழங்காமல் 315 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 3-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 29 ரன்கள் எடுத்து இருந்தது. டேவிட் வார்னர் 17 ரன்னுடனும், லபுஸ்சேன் 3 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி மதிய உணவு இடைவேளைக்கு பிறகு 2 விக்கெட்டுக்கு 182 ரன்கள் சேர்த்த நிலையில் டிக்ளேர் செய்தது. 9-வது சதம் அடித்த லபுஸ்சேன் 104 ரன்களுடனும், ஸ்டீவன் சுமித் 20 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். லபுஸ்சேன் முதல் இன்னிங்சில் இரட்டை சதம் விளாசி இருந்தார். இதன் மூலம் ஒரே டெஸ்டில் இரட்டை சதம் மற்றும் சதம் அடித்த 8-வது வீரர், 3-வது ஆஸ்திரேலியர் என்ற சிறப்பை லபுஸ்சேன் பெற்றார். இதனையடுத்து 498 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட்இண்டீஸ் அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 62 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 192 ரன்கள் எடுத்திருந்து. இதையடுத்து 5வது நாளில் அந்த அணியின் வெற்றிக்கு 306 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 7 விக்கெட்டுகளே இருந்தது. அந்த அணியில் கேப்டன் பிராத்வெய்ட் 101 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இந்நிலையில், 5வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் சதம் அடித்திருந்த கேப்டன் பிராத்வெய்ட் 110 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து களம் இறங்கிய ஹோல்டர் 3 ரன்னிலும், சில்வா 12 ரன்னிலும், அல்சாரி ஜோசப் 43 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இறுதியில் அந்த அணி 110.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 333 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணி டரப்பில் பிராத்வெய்ட் 110 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் லயன் 6 விக்கெட்டும், டிராவிஸ் ஹெட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.





