நீதிமன்ற ஆணையுடன் டக்ளஸின் அலுவலகத்திற்குள் நுழைந்த CID – பல மணி நேரம் சல்லடை

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகம் மற்றும் அதன் வளாகத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் பல மணி நேரம் தீவிர தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம், இலக்கம் 273, ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் இன்று (19) இந்தத் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குக் கிடைத்ததாகக் கூறப்படும் தகவலொன்றின் அடிப்படையில், யாழ்ப்பாண நீதிமன்றத்தில் தேடுதல் ஆணையைப் பெற்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகம் மற்றும் அதனைச் சூழவுள்ள வளாகம் முழுவதும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தீவிரமாகச் சோதனையிடப்பட்டுள்ளது.

பல மணி நேரம் நீடித்த இந்தத் தேடுதல் நடவடிக்கையின் நிறைவில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா முன்னிலையில், கட்சியின் அலுவலக நிர்வாகப் பொறுப்பாளரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

இதனையடுத்து, அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இந்தத் தேடுதல் நடவடிக்கை எந்தக் குற்றச்சாட்டு அல்லது விசாரணையின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டது என்பது தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

முன்னாள் அமைச்சரின் அலுவலகத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் பல மணி நேரம் சோதனை நடத்திய சம்பவம் யாழ்ப்பாண அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Leave a Reply