யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று (19) கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது மாவட்ட செயலக வளாகத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
அண்மையில் நடத்தப்பட்ட பரீட்சை மற்றும் அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட நேர்முகத் தேர்வுக்குத் தெரிவானவர்களின் பெயர்ப் பட்டியலில் பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள் கருத்துத் தெரிவிக்கையில்,
நடைபெற்று முடிந்த பரீட்சை மற்றும் அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட நேர்முகத் தேர்வுக்கான பெயர்ப் பட்டியல் ஆகியவற்றின் ஊடாக வேலையற்ற பட்டதாரிகளின் அடிப்படை உரிமைகள் முழுமையாக மீறப்பட்டுள்ளன.
குறிப்பாக, குறித்த பெயர்ப் பட்டியல் எந்த அடிப்படையில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது என்பது தொடர்பில் வெளிப்படைத்தன்மை இல்லை.
ஏற்கனவே அரச சேவையில் உள்ள பட்டதாரிகள் பாடவாரியாகவும் மாகாண வாரியாகவும் அதிகளவில் உள்வாங்கப்பட்டுள்ளமை, வேலையற்ற பட்டதாரிகளை முற்றாகப் புறக்கணிக்கும் செயற்பாடாக அமைந்துள்ளது.
இந்த நடவடிக்கை வடக்கு மாகாணம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, பரீட்சைப் புள்ளிகள் மற்றும் நேர்முகத் தேர்வுக்கான தெரிவு நடைமுறைகள் தொடர்பில் நியாயமானதும் வெளிப்படையானதுமான அணுகுமுறை பின்பற்றப்பட வேண்டும்.
அத்துடன், ஏற்கனவே அரச சேவையில் உள்ள பட்டதாரிகளுக்கும் வேலையற்ற பட்டதாரிகளுக்கும் சமமான வாய்ப்பு வழங்கும் வகையில் 50:50 என்ற விகிதாசார அடிப்படையில் உள்வாங்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளைச் சட்டரீதியாகவும் நியாயமான முறையிலும் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் முன்னெடுத்து வருகின்றது.
தமக்கு இழைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் அநீதிக்கு நீதி கோரியும், ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் சமவாய்ப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தியுமே இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகப் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.





