பொது அமைதி என்ற பெயரில் ஐனநாயகப் போராட்டங்களுக்கு அடக்குமுறையா? என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவருமான சபா குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் பொது அமைதியைப் பேணுவதற்காக பொதுப் பாதுகாப்புச் சட்டம் 12 இல் தனக்குள்ள அதிகாரத்தை கொண்டு இராணுவத்தை களம் இறக்குமாறு ஐனாதிபதி கோட்டாபய கூறியதாக சபாநாயகர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஐனாதிபதியின் அறிவிப்பு பொது அமைதி என்ற பெயரில் நாட்டில் நடைபெறுகின்ற பொது மக்களின் ஐனநாயக போராட்டங்களை இராணுவத்தின் இரும்புக் கரத்தின் மூலம் அடக்குமுறைக்குள் கொண்டு வருவதற்கான செயற்பாடா? என்ற சந்தேகம் நியாயம் கேட்டு போராடும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
மக்களின் ஐனநாயகப் போராட்டங்களுள் விசமிகள் ஊடுறுவி குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றார்கள்.
ஏற்பாட்டாளர்கள் போராட்டங்களை அவதானமாக முன்னெடுக்க வேண்டும்.
இராணுவத்தை வீதிக்கு இறக்குவது கோட்டாபய ஆட்சியில் ஒரு புதிய விடையம் இல்லை.
காரணம், ஏற்கனவே நாட்டில் வீதி எங்கு பார்த்தாலும் சீருடை, ஆயுதம் தரித்த இராணுவம் தான் வீதித் தடைகளை போட்டு நிற்கின்றார்கள்.
அவ்வாறான நிலையில் மேலதிகமான அதிகாரம் இராணுவத்திற்கு வழங்கப்படுகிறது என்றால் அது தமக்கு வாக்களித்த மக்களின் ஐனநாயகப் போராட்டங்களை ஆயுத முனையில் அடக்குவதே ஆகும்.
ஆனால் ஐனாதிபதியின் அறிவிப்பு, நியாயம் கேட்டு ஐனநாயக வழியில் வீதியில் போராடும் மக்களை அடக்கி அவர்களது குரல் வளையை நசுக்குவதே ஆகும் என்றார்.