நாடாளுமன்றத்திற்கு அருகே நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது , வீதியில் சவப்பெட்டியை எரித்து , பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற சுற்று வட்ட பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற போராட்டத்தின் போது போராட்டகாரர்களால் வீதியில் சவப்பெட்டி தீயிட்டு கொளுத்தப்பட்டது.
அதனால் வீதி சேதமடைந்துள்ளதாக தெரிவித்து தலங்கம பொலிஸாரினால் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
அதனடிப்படையில் , வெலிவேரிய பகுதியை சேர்ந்த சாமர கொஸ்வத்த மற்றும் கோகிலா ஹன்சமாலி பெரேரா ஆகிய இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த ஆர்ப்பாட்டத்தில் மஹரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பலத்த காயமடைந்த நிலையில், அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.