மாகாண இணையத்தளத்தில் தமிழ் மொழிக்கும் உரிய இடம் வழங்க வேண்டும்-இம்ரான் மஹ்ரூப் எம்.பி

கிழக்கு மாகாணத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தமிழ்மொழிக்கு உரிய இடம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யகம்பத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக ஆளுநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கிழக்கு மாகாணத்தில் மூன்று இன மக்களும் வாழ்கின்றார்கள் என்பதையும் இதில் 75 வீதத்திற்கும் மேற்பட்டவர்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்பதையும் தாங்கள் அறிவீர்கள்.

இந்நிலையில் கிழக்கு மாகாண உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பல விடயங்கள் சிங்கள மொழியில் மட்டுமே பதிவேற்றப்படுகின்றன. குறிப்பாக தங்களோடு சம்பந்தப்பட்ட சகல தகவல்களும் சிங்கள மொழியிலேயே பதிவேற்றப்படுகின்றன.

இதனால் தமிழ்மொழி பேசுபவர்களால் இந்தத் தகவல்களை விளங்கிக் கொள்ள முடியாத நிலை காணப்படுவதாக பலர் எனது கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்கள்.

இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் தமிழ்மொழிக்கும் உரிய அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் முன்னைய ஆளுநர்கள் காலத்தில் தமிழ்மொழி அமுலாக்கம் திருப்திகரமான நிலையில் இருந்தது. எனினும் தங்களது நிர்வாக காலத்தில் இந்த விடயத்தில் புறக்கணிப்பு இருப்பது குறித்து நான் மிகவும் கவலையடைகின்றேன்.

எனவே, இந்த விடயத்தில் விசேட கவனம் செலுத்தி கிழக்கு மாகாண உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தமிழ்மொழிக்கும் உரிய அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *