காட்டு யானையின் தாக்குதலில் குடும்பஸ்தர் பலி

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் கல்கேனி எனும் வயற்பிரதேசத்தில் நேற்று (04) இரவு காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி குடும்பஸ்தர் ஒருவர் உயிர் இழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் பொட்டுக்குளம் வாகனேரி கிராமத்தைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான சின்னதம்பி வேலுப்பிள்ளை (வயது 59) என்பவரே உயிர் இழந்துள்ளார்.

இவர் வழமை போன்று வயல் வேலைகளை முடித்து விட்டு தமது இருப்பிடம் நோக்கி துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் காட்டுக்குள் இருந்து பிரவேசித்த யானை இவரைத் தாக்கியுள்ளது.

ஸ்தலத்திலேயே உயிர் இழந்த சடலத்தை ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் வாழைச்சேனை பொலிஸார் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் சென்று பார்வையிட்டதுடன் மக்களின் உதவியுடன் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் குறித்த பிரதேசத்தில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாக யானைகளை கட்டுப்படுத்துவதற்கான யானை வேலிகள் அமைக்க வேண்டும் என விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *