இலங்கை மோசமடைந்தமைக்கு கோட்டா அரசே பொறுப்புக்கூற வேண்டும்! – ஆளுங்கட்சி சிரேஷ்ட எம்.பி

நாடு பாரிய நிதி நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு மோசமடைந்துள்ளமைக்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட அமைச்சரவையும், நிதி அமைச்சும் அதேபோல் அரச அதிகாரிகளுமே பொறுப்புக்கூற வேண்டும் என ஆளுங்கட்சி சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிதி நெருக்கடி நிலைமைகள் மற்றும் அரசின் தீர்மானங்கள் குறித்து தனது நிலைப்பாட்டை ஊடகங்களிடம் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த அரசு பொருளாதார மறுசீரமைப்பை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை இருந்த போதிலும் இன்றுள்ள நிலைமைகளை அவதானிக்கும்போது அவ்வாறான மறுசீரமைப்பு வேலைத்திட்டமொன்று காணப்படவில்லை.

இலங்கைக்கு என்ற ஒரு பொருளாதாரக் கொள்கையை உருவாக்கிக்கொள்ளத் தவறியுள்ளமையே நாடு உற்பத்தித்துறையில் வீழ்ச்சியடைய பிரதான காரணமாகும்.

சர்வதேச கடன்களைப் பெற்றுக்கொண்டு வெறுமனே உண்டு செலவழித்து வருகின்றோமே தவிர அவசியமான எந்தவித வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை.

நாட்டில் ஊழலும், அரச மோசடிகளும் அதிகரித்துவிட்டன. இவ்வாறான நிலையில் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது.

நாட்டின் அரசியல் கொள்கை எதுவாக இருந்தாலும் பொதுவான பொருளாதாரக் கொள்கை ஒன்றையே கொண்டு செல்ல வேண்டும் – என்றார்.

Leave a Reply