ஐக்கிய நாடுகள் சபையுடன் இலங்கை சுமூகமான முறையில் இணைந்து செயல்படும். ஆனால், நாட்டின் உள்விவகாரங்களில் ஐ.நாவின் அதீத தலையீட்டை இலங்கை எதிர்க்கும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தகவல்களை சேகரிப்பதற்காகவென விசேட பொறிமுறை ஒன்றை அமைப்பதற்காக ஐ. நா. முன்னெடுக்கும் முயற்சிகளை ஏற்றுக்கொள்ள முடியாது. இலங்கைக்கு எதிராகப் பயன்படுத்துவதற்காகவே இவ்வாறு தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன எனவும் குற்றம்சாட்டினார்.
அந்தத் தகவல்கள் என்ன என்பதை அறிந்துகொள்வதற்கான வழிகள் எதுவும் இல்லை. இவ்வாறு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களிலுள்ள உண்மையை அறிந்துகொள்வதற்கான வாய்ப்புக்களும் இல்லை என்றார்.
புதிதாக நியமிக்கப்பட்ட 17 நாடுகளின் தூதுவர்களை நேற்று சந்தித்தபோதே அமைச்சர் பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.
குறித்த தூதுவர்கள் நேற்றுமுன்தினம் ஜனாதிபதியிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கொடுத்து பதவியேற்றுக்கொண்டனர்.
இந்த தூதுவர்களை வரவேற்ற அமைச்சர் பீரிஸ், இந்த நாடுகள் ஒவ்வொன்றுடனும் நெருக்கமான உறவுகளைப் பேண அரசாங்கம் விரும்புகின்றது எனத் தெரிவித்தார்.
இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக தூதுவர்களுக்கு விளக்கமளித்த அமைச்சர், கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்புக்களையும், தடுப்பூசி வழங்குவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், இலங்கை அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் செயலகம், விசாரணை ஆணைக்குழுக்கள், மனித உரிமைகள் ஆணைக்குழு போன்றனவற்றின் செயற்;பாடுகள் தொடர்பாக விளக்கமளித்தார்.
மேலும், ஐ. நாவுடன் சுமூகமான முறையில் இணைக்கமாகச் செயல்படுவதற்கே அரசாங்கம் விரும்புவதாகவும், அதிகமான தலையீடுகளை ஏற்க முடியாது எனவும் தெரிவித்தார்.






