வடக்கு மீனவர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு கடற்தொழில் அமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுப்பாராக இருந்தால் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்க தயார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட மீனவர்களினால் இன்று இந்திய இழுவைப் படகுகளை நிறுத்த கோரி முன்னெடுக்கப்பட்ட மாவட்ட செயலக முடக்கப் போராட்டத்தில் கலந்துகொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
யாழ். மாவட்ட மீனவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கடற்தொழில் அமைச்சர் நேரடியாக வருகை தந்து சில உறுதிமொழிகளை அளித்து இந்த போராட்டத்தினை நிறுத்தியுள்ளார்.
அதனை நாங்கள் வரவேற்கின்றோம். இன்று மீனவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை கடற்தொழில் அமைச்சர் நிறைவேற்ற வேண்டும் அதற்கு நாமும் ஆலோசனை, ஒத்துழைப்பு வழங்க தயார்.
இன்று மீனவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை பொய்யாகவோ அல்லது நிறைவேற்றாவிட்டாலோ நாங்கள் கடற்றொழில் அமைச்சருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை வரும் எனவும் தெரிவித்தார்.






