புத்தளம் – கற்பிட்டி பகுதியில் இரவு வேளைகளில் சுற்றித்திரியும் கட்டாக்காலி கழுதைகளால் தாம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக வாகன சாரதிகளும், பொதுமக்களும் விசனம் தெரிவிக்கின்றனர்.
கற்பிட்டி பிரதேச சபைக்கு உட்பட்ட கற்பிட்டி நகரத்திற்கும் – ஏத்தாளை பகுதிக்கு இடைப்பட்ட பிரதேசங்களில் பிரதான வீதிகளில் இவ்வாறு கட்டாக்காலி கழுதைகள் இரவு நேரங்களில் கூட்டமாக வீதிகளில் சுற்றித்திரிவதாலும், வீதியின் நடுவே தரித்து நிற்பதாலும் தாம் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் பயணிகள் குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறு பிரதான வீதிகளில் இரவு வேளைகளில் கட்டாக்காலி கழுதைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதனால் அடிக்கடி விபத்துச் சம்பவங்களும் இடம்பெறுவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்
எனவே, உரிய பராமரிப்பு இன்றி, வீதிகளில் சுற்றித்திரியும் கட்டாக்காலி கழுதைகளை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை கற்பிட்டி பிரதேச சபை மேற்கொள்ள வேண்டும் எனவும் மக்கள் கூறுகின்றனர்.
அத்துடன், உரிமையாளர்கள் இன்றி சுற்றித் திரியும் கட்டாக்காலி கழுகளை பிரதேச சபை பொறுப்பெடுத்து பராமறிக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன், உரிமையாளர்கள் இருப்பின் அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுத்து, அதிகளவில் அபராத தொகையும் விதிக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
அத்தோடு, கழுதைகளால் ஏற்படும் விபத்தில் காயமடைந்தவர்களின் முழு சிகிச்சை செலவுகளையும் விபத்துக்கு காரணமான கழுதைகளின் உரிமையாளர்களிடம் இருந்து வசூலிக்கவும் கற்பிட்டி பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.






