
பொது உடன்பாட்டில்
ஒப்பமிடுவதில்
இழுபறி நிலை
தமிழரசுக் கட்சி புதிய யோசனையை முன்வைத்ததால் தாமதம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆவணத்தில் ஒப்பமிட மறுப்பு

இன பிரச்சினைக்கான தீர்வை முன்னிறுத்தி தமிழ் – முஸ்லிம் தரப்புகளால் சர்வதேச சமூகத்துக்கு
சமர்பிக்கப்பட உள்ள ஆவணத்தில், முத்தமிடுவதில் கட்சிகளுக்கிடையே இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
பொது உடன்பாட்டில் ஒப்பமிடுவதற்கு நேற்றையதினம் தீர்மானிக்கப்பட்டு இருந்தபோதிலும், எதிர்வரும் புதன்கிழமை இந்த ஆவணத்தில் ஒப்பமி டுவதற்கு கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சி வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.
தமிழ் – முஸ்லிம் தரப்புகள் முதலில் யாழ்ப்பாணத்திலும், பின்னர் இரண்டு தடவைகள் கொழும்பிலும் கூடி தீர்வு யோசனைகள் குறித்து மந்திராலோசனைகள் மேற்கொண்டன.
இந்தச் சந்திப்புகளில் ஏழு கட்சிகள் கலந்துகொண்டு,ஒருமித்த தீர்மானங்களை எட்டியிருந்தன.
ஏற்கனவே, இணக்கம் காணப்பட்ட விடயங்களின் அடிப்படையில், இரண்டாவது தடவையாக இத்தரப்புகள் கடந்த வாரம் கொழும்பில் கூடியபோது, பத்துக்கும் மேற்பட்ட தமிழ், முஸ்லிம் கட்சிகள் இதில் கலந்து கொண்டன.
இந்த மூன்றாவது கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழரசுக் கட்சி, அதன் யோசனைகளை எழுத்து வடிவில் சமர்ப்பித்தது.
தமிழரசு கட்சி சார்பாக எம். ஏ. சுமந்திரன் அந்தக் கட்சியின் யோசனைகளை முன்வைத்தார். இதை தொடர்ந்து, முன்னர் எட்டப்பட்ட ஒருமித்த தீர்மானங்களை மாற்றியமைக்கும் நிலை ஏற்பட்டது. இதன்போது,சூடான வாதப் பிரதி வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இதனால்,தமிழர் தரப்புகள் பொது இணக்கப்பாட்டுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது.
இதன் பின்னணியில்தான் , ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்தபடி, நேற்று வெள்ளிக்கிழமை தலைவர்களால் ஆவணத்தில் ஒருமித்து ஒப்பமிட முடியாமல் போனதென கட்சி வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.
இருப்பினும், அடுத்த வாரம் அளவில் பொது இணக்கப்பாட்டுக்கு வந்து விடுவார்கள் என்றும்,புதன்கிழமை அளவில் ஆவணத்தில் கைச்சாத்திடுவார்கள் என்று பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட கட்சி பிரதிநிதிகள் கூறுகின்றனர்.
அரசமைப்புக்கான,13 ஆவது திருத்தம் மூலம் கொண்டு வரப்பட்ட மாகாண சபைகள் முறைமையை முழுமையாக அமுல்படுத்தவும், மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்தவும் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு இந்தியாவைக் கோரும் , இந்தப் பொது உடன்பாடு , இந்தியா உட்பட சர்வதேச நாடுகளின் தூதுவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இலங்கைக்கான இந்திய தூதுவரிடம் ஆவணம் முதலில் சமர்ப்பிக்கப்படும். பின்னர்,ஏனைய நாடுகளின் தூதுவர்களிடமும் சமர்ப்பிக்க உத்தேசித்து உள்ளதாக தெரியவருகிறது.





