கார்த்திகை மலர்களை கோவிலுக்கு வெளியில் எறிந்த சம்பவத்தை கண்டித்து கனடாவில் ஆர்ப்பாட்டம்!

கார்த்திகை 27 ஆம் திகதி மாவீரர் தினத்தையொட்டி கனடாவில் ஐயப்பன் கோவில் ஒன்றில் கார்த்திகைப் பூவை வைத்து அலங்காரப் பூசை ஒன்றை செய்வதற்கு ஒருவர் குறித்த கோவிலில் அனுமதி பெற்றிருந்தார். குருக்களும் இந்த அலங்காரப் பூசையை வரவேற்று ஒப்புதல் அளித்து அதனைப் பெற்றுக் கொண்டிருந்தார்.

ஆனால், சாமி வீதிவலம் சென்றபோது, அந்த அலங்கார வளைவு வெறுமனே இருந்ததால் அங்கே அதிருப்தி நிலை உருவாகியுள்ளது.

இதுதொடர்பில், குறித்த கோவிலின் தலைவர், செயலாளரிடம்

வினவிய போது, உங்கள் குப்பை எல்லாவற்றையும் சாமிக்கு வைக்க முடியாது என கூறி அந்த கார்த்திகை மலர்களை கோவிலுக்கு வெளியில் எறிந்துள்ளனர்.

இச் சம்பவத்தை கண்டித்து, மார்க்கழி 25 ஆம் திகதி கனடா ஐயப்பன் கோவிலுக்கு எதிர்ப்புற நகராட்சிக்குரிய பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டம் தொடங்கி சிறுது நேரத்தில் ஐயப்பன் கோயிலுக்குள் இருந்து வந்த ஒருவர், இந்த இடத்தில் நிற்கக் கூடாது என்று கூறி, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஒருவரை அடித்து விரட்டியுள்ளார்.

எனினும், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவரும் அங்கிருந்து விலகாமல் தொடர்ந்தும் கலந்து கொண்டதோடு, அடிதடியில் இறங்கியவரை நேரடியாக காணொளிப்பதிவும் செய்துள்ளனர்.

மேலும், மலரை தூக்கி வீசிய குறித்த கோவிலின் தலைவர், செயலாளருக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், மூன்று கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் கண்டன போராட்டம் முன்னெடுக்கப்படும் என கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply