எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது தெரியாத சூழ்நிலையில் வாழ்கின்றோம்! வவுனியா பிரதேச செயலாளர்

கொவிட் நிலைமையுடன் சேர்ந்து பொருளாதாரமும் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது தெரியாத ஒரு சூழ்நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அரசாங்கம் பொருளாதார கொள்கைகளை மறுசீரமைத்து முன்னேற்ற பாதையில் செல்ல முயற்சித்துக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அரசாங்கம் தன்னிறைவான கிராமங்களுக்கு அதிகளவான நிதியினை வழங்குகின்றது என வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் தெரிவித்தார்.

வவுனியா மருக்காரம்பளை கிராம சேவகர் பிரிவில் சௌபாக்கியா நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

12 வருடங்களாக பிரதேச செயலாளராக கடமையாற்றி வருகின்றேன். அந்த வகையில் பல வாழ்வாதார உதவிகளை எமது திணைக்களங்களின் ஊடாக வழங்கி வருகின்றோம். எனினும் நாம் எதிர்பார்த்த அபிவிருத்தி எட்டப்பட்டதா என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

தற்போதுள்ள அரசாங்கமானது கிராமத்தை நோக்கிய அபிவிருத்தி அதாவது தன்னிறைவான கிராமம் என்ற கொள்கையை நோக்கி செல்கின்றது.

2022 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்திலே 100 இல் 16 வீதம் கிராமங்களின் அபிவிருத்திக்காக செலவு செய்யப்படுகின்றது. எமது நாட்டை பொறுத்தவரையில் பெரிய தொழில்துறைகள் கம்பஹா, கொழும்பு போன்ற மாவட்டங்களில் உள்ளன. ஏனைய இடங்களில் இல்லாவிட்டாலும் வவுனியா போன்ற மாவட்டங்களில் தொழில்துறை பெரிய அளவில் அபிவிருத்தி அடையவில்லை.

எனினும் அங்கு கிராமங்களில் குடிசை கைத்தொழில் மட்டத்தில் தொழிலை உருவாக்கி அதனை நடுத்தரமாக்கி எதிர்காலத்தில் அந்த தொழிலை மிகப்பெரிய வியாபாரமாக மாற்ற வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் அரசாங்கம் இவ்வாறான சௌபாக்கியா கிராமங்களை உருவாக்கி வேலை செய்கின்றது.

செட்டிகுளத்தில் பிரதேச செயலாளராக இருக்கும் போது பல தையல் இயந்திரங்களை வழங்கியிருந்தோம். ஆனால் அவை இன்று வீடுகளில் முடங்கி கிடக்கின்றது. அவர்கள் வீட்டுத்தேவைக்கு கூட அதனை பயன்படுத்துகின்றார்களா என்பது எமக்கு தெரியவில்லை.

எனவே அதனை பெற்று கிராம மட்டத்தில் மினி காமன்ஸ்களாக உருவாக்க வேண்டும் என்ற அவா உள்ளது. ஆனால் அதனை பெற்ற பயனாளிகள் பின்னிற்கின்றனர்.

பொதுவாக பயன்படுத்தும் பாரிய தையல் இயந்திரங்கள் எம்மிடம் இருந்தன. இன்று எவராவது மினி காமன்ஸ் செய்வார்களாக இருந்தால் அவர்களை நேரில் சென்று பார்த்து வழங்கி வருகின்றோம். எமது நோக்கமும் அரசாங்கத்தின் நோக்கமும் மக்களின் அபிவிருத்தியே.

தற்போது கொவிட் நிலைமையுடன் சேர்ந்து பொருளாதாரமும் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது தெரியாத ஒரு சூழ்நிலையில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.

அரசாங்கம் பொருளாதார கொள்கைகளை மறுசீரமைத்து முன்னேற்ற பாதையில் செல்ல முயற்சித்துக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அரசாங்கம் தன்னிறைவான கிராமங்களுக்கு அதிகளாவான நிதியினை வழங்குகின்றது. அந்த நிதியை சரியாக பயன்படுத்த வேண்டும்.

இன்று உரப்பிரச்சனை, கிருமி நாசினி பிரச்சினை என நிறைய பிரச்சினைகளுக்கு மத்தியில் நாங்கள் போராடிக்கொண்டிருக்கின்றோம்.

எதிர்காலததில் வெளிநாடுகளில் நாம் கையேந்தப்போகின்றோமா? தன்னிறைவான நாட்டை கட்டியெழுப்ப போகின்றோமா என்பது நகரங்களில் இல்லை கிராமங்களிலேயே தங்கியுள்ளது என தெரிவித்தார்.

Leave a Reply