சுனாமி பேரலை இடரில் உயிரிழந்தோருக்கு அம்பாறை மாவட்ட உறவுகள் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
சுனாமி ஆழிப்பேரலையினால் உயிரிழந்தவர்களின் 17ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை, சாய்ந்தமருது, பாண்டிருப்பு, பெரியநீலாவணை, மாளிகைக்காடு, காரைதீவு, நிந்தவூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களினால் அனுஸ்டிக்கப்பட்டது.
கல்முனை பௌத்த விகாரை, பாண்டிருப்பு நினைவாலம், காரைதீவு சுனாமி நினைவாலயம், கல்முனை கடற்கரை பள்ளிவாசலில் இடம்பெற்ற நிகழ்வில் பலரும் தமது உறவுகளை நினைவு கூர்ந்தனர்.
மேலும், சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக இங்கு அமைக்கப்பட்ட பல தூபிகளில் மாலை அணிவிக்கப்பட்டு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.
நாட்டில் கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட இயற்கை ஆழிப்பேரலை அனர்த்ததினால் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பகுதி அதிகமான உயிரிழப்புக்களையும், சேதங்களை சந்தித்த பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.










