17 ஆண்டுகள் கடந்தும் மக்களுக்கு கிடைக்காத மருதமுனை சுனாமி வீடுகள்

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. மருதமுனை 65 மீட்டர் வீட்டுத்திட்டத்தில் 78 வீடுகள் மக்களுக்கு வழங்கப்படாமல் பாழடைந்த நிலையில் காணப்படுகின்றன.

2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமிப் பேரனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மருதமுனை மக்களுக்காக கட்டப்பட்ட வீட்டுத் திட்டமே மருதமுனை 65 மீட்டர் வீட்டுத் திட்டமாகும்.

கடற்கரையிலிருந்து 65 மீட்டர் எல்லைக்குள் குடியிருந்து இருப்பிடங்களை இழந்த பாதிக்கப்பட்ட மக்களுக்காக கிராமத்தின் மேற்குப் புறமாக கிடந்த மேட்டு வட்டை காணியில் தேசிய வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சால் 186 வீடுகளை நிர்மாணிப்பதற்கு அரச அபிவிருத்தி நிர்மாண கூட்டுத்தாபனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இதன் நிர்மாண வேலைகள் 2006ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அப்போது 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் திகதி மக்கள் பாவனைக்கு வீடுகள் வழங்கப்படும் என அப்போதைய மாவட்ட அரச அதிபர் தெரிவித்திருந்தார்.

எனினும் பல்வேறு மக்கள் போராட்டங்கள், தடைகள் என நீதிமன்ற கதவுகளையும் முட்டிமோதி முதற்கட்டமாக 2012 ஆம் ஆண்டு 50 வீடுகள் கையளிக்கப்பட்டன.

178 வீடுகளில் இதுவரை நூறு வீடுகள் மாத்திரமே மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளன.

மீதமாக உள்ள 78 வீடுகளும் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 17 ஆண்டுகள் தாண்டியும் இதுவரை மக்களுக்கு வழங்கப்படாத நிலையில் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகின்றன.

காலத்துக்கு காலம் வரும் அரசியல் தலைவர்களால் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதும் மக்களுக்கு வீடுகள் கிடைக்க வில்லை. இன்னிலையில் குறித்த 78 வீடுகளும் பாழடைந்த நிலையில் காணப்படுகின்றன.

வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த உபகரணங்கள், மின்சாரப் பொருட்கள், ஜன்னல்கள் திருடப்பட்டும் உடைக்கப்பட்டும் காணப்படுகின்றன.

தற்போது வீட்டு கூரைகளும் களவாடப்பட்டு வருகின்றன. மனிதர்கள் மாத்திரமல்லாது விலங்குகளும் அசிங்கங்கள் செய்யும் மறைவிடமாக இப்பகுதி மாறி வருவதாக மக்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.

கிராமத்தின் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலாக மாறி வரும் இந்த வீடுகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்று கடந்த 17 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் இந்த வீட்டுத் திட்டத்தை அண்மித்த பகுதிகளில் குடியேறிய மக்கள் தமது அவலக் குரல்களை எழுப்பி வருகின்றனர்.

சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட நினைவு நாளான இன்றைய தினமும் (26) இம்மக்கள் குறித்த இந்த 78 வீடுகளையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வராது இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பி தமது அவலங்களை இவ்வாறு வெளிப்படுத்தினார்கள்.

Leave a Reply