தோட்டப்புற சிறுவர்களை பணிகளில் இருந்து நிறுத்த நடவடிக்கை – ஜனாதிபதி!

சிறுவர்களின் பாதுகாப்பை கிராம மட்டத்தில் இருந்து பாதுகாக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் மற்றும் தொழில் நிறுவனங்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பணியாளர் சேவையில் ஈடுபட்டுள்ள சிறுவர்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில், அவர்களில் பெரும்பாலானோர் தோட்டப் புறங்களைச் சேர்ந்த சிறுவர்கள் என தெரியவந்துள்ளதாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலைமையை தடுப்பதற்கு கிராம அலுவலர் மட்டத்தில் இருந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதன்படி, பணியாளர்களாக கடமை புரிகின்ற தோட்டப்புற சிறுவர்கள் தொடர்பாக தகவல்கள் கிடைக்கப்பபெறும் பட்சத்தில், அவற்றை உடனடியாக நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

இதேவேளை நாட்டில் சிறுவர்கள் மற்றும் பெண்களை பாதுகாப்பதற்காக அரச நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கும் ஜனாதிபதி இதன்போது பாராட்டு தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் சிறுவர்களின் அபிவிருத்திக்காக, வேறு நாடுகள் மேற்கொண்டுள்ள விடயங்களை ஆராய்ந்து, அவற்றை கிராம மற்றும் நகர்ப்புறங்களில் செயற்படுத்துவதற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

மேலும் சிறுவர்களை முன்பள்ளிகள், பாடசாலைகள், மற்றும் அறநெறிப் பாடசாலைகளுக்கு அனுப்புவதன் முக்கியத்துவம் குறித்தும் ஜனாதிபதி இதன்போது தெளிவுபடுத்தியுள்ளார்.

அத்துடன் பாடசாலைகளுக்கு செல்லமுடியாதுள்ள சிறுவர்கள் தொடர்பில் தகவல்களை பெற்று, அதற்கான காரணத்தைக் கண்டறிவதன் மூலம், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பிரதான கடமையாகும் எனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் போதைப் பொருட்களுக்கு அடிமையாகியுள்ள சிறுவர்களை அதில் இருந்து மீட்டெடுத்து, அவர்களுக்கு கல்வியை பெற்றுக் கொடுப்பதும் பிரதான பொறுப்பாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை வெளிநாடுகளில் வாழும் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும், துஷ்பிரயோகம் செய்யப்படலாம் என சந்தேகம் உள்ள குடும்பங்களில் சிறுவர்களை அடையாளம் காண வேண்டும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

ரிசாட் பதியுதீனின் வீட்டில் தீக்காயங்களுடன் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு வீடொன்றை அமைத்துக் கொடுப்பதற்கும், இரண்டு சகோதரிகளுக்கு சுயதொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *