மாம்புரியில் உடைந்து போயுள்ள வீதியை புனரமைக்க கோரிக்கை

பாலாவி – கற்பிட்டி பிரதான வீதியின் மாம்புரி பகுதியில் உள்ள தேங்காய் தொழிற்சாலைக்கு அருகில் காணப்படும் சிறிய கால்வாய் சேதமடைந்துள்ளமையால் அவ்வீதியூடாக போக்குவரத்து செய்யும் வாகன சாரதிகள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர், கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இந்த பிரதான வீதியில் உள்ள சிறிய கால்வாய் பாரிய குழிகள் ஏற்பட்டு உடைந்துள்ளன.

இதனையடுத்து, மண் மேடுகள் அமைக்கப்பட்டதுடன், வாகனங்கள் செல்வதற்கு தற்காலிகமாக வசதிகளும் வீதி அபிவிருத்தி அதிகார சபை மூலம் முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன், கால்வாய் உடைந்து போயுள்ளதால் கனரக வாகனங்கள் பயணம் செய்வதை தவிர்க்கவும் என்ற அறிவித்தல் பதாதையும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாலாவி – கற்பிட்டி பிரதான வீதியில் நாளாந்தம் கனரக வாகனங்கள் உட்பட நூற்றுக்கணக்கான வாகனங்கள் பயணம் செய்வதால், குறித்த கால்வாய் மேலும் உடைந்து போகலாம் என வாகன சாரதிகளும், பயணிகளும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

எனவே, குறித்த கால்வாய் மேலும் உடைந்து போக்குவரத்து பிரச்சினைகளை ஏற்படுத்தும் முன்னர், இதனை அபிவிருத்தி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply