வவுனியாவிலும் டெல்ரா வைரஸ் தொற்றுடன் கொரோனா தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் டெல்ரா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வவுனியாவிலும் டெல்ரா வைரஸ் தொற்றுக்குள்ளான கொரோனா நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார்.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (06.08) காலை வெளியாகின.
அதில், வவுனியா வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஆண் ஒருவருக்கு டெல்ரா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொழும்பு சென்று வந்த நிலையில் காய்ச்சல் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் குறித்த நபர் அனுமதிக்கப்பட்ட போது அவரிடம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யபபட்டது.
இதனையடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகள் வெளியாகிய நிலையில், அவருக்கு டெல்ரா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதராப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தொற்றாளரை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.