1000 கிராமியப் பாலங்கள் இந்த வருட இறுதிக்குள் நிர்மாணிக்கப்படும் எனவும், 700 க்கும் அதிகமான பாலங்கள் நிர்மாணிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஆளும் தரப்பு பிரதமர கொரடா நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் கீழ், ‘கிராமங்களை இணைக்கும் இதயத்தின் பாலம் ‘ என்ற கருப்பொருளின் அடிப்படை நோக்கமாகக் கொண்டு செயற்படுத்தப்பட்டுள்ளது.
அண்மையில் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்ட 5000 கிராமிய பாலங்களை நிர்மாணிக்கும் திட்டத்தின் மீளாய்வுக் கூட்டம், நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் தலைமையில் நெடுஞ்சாலை அமைச்சு கேட்போர் கூடத்தில் நடைபெற்றது
கடந்த 06.08.2021 வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் அமைச்சரை சந்தித்த மக்கள் பிரதிநிதிகள், இந்தப் பாலம் நிர்மாணிக்கும் திட்டத்தை விரைவுபடுத்துமாறு, அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் கோரிக்கையை முன்வைத்தனர்.
இந்த திட்டம் இலங்கையில் உள்ள ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் செயல்படுத்தப்பட்டு வருவதால், நாட்டில் தற்போதைய கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியிலும், திட்டமிட்டவாறு தடையின்றி எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்பது குறித்து வீதி அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல் வழங்கினார்.
2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 1000 கிராமப் பாலங்களை நிர்மாணித்து கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை இலகுபடுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வாய்ப்பு ஏற்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, கொரோனா தொற்று நோயால் ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதால் பாலம் நிர்மாணிக்கும் திட்டம் தாமதமாகி வருவதையும் அவதானிக்க முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.