வவுனியா வைத்தியசாலை தாதியர்களுக்கு ஒருநாள் விடுமுறையா?

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பணிபுரியும் வெளிமாவட்டங்களை சேர்ந்த தாதியர்கள் தொடர்ச்சியாக விடுமுறை எடுக்கமுடியாது எனவும் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே விடுமுறை எடுக்கமுடியும் எனவும் நேற்றையதினம் வைத்தியசாலையில் இடம்பெற்ற கூட்டத்தில் வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளதாக தாதியர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ் விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது

வைத்தியசாலையில் பணிபுரியும் தாதியர்களுக்கு ஒவ்வொரு வாரமும் ஞாயிறு தினத்தில் மட்டுமே விடுமுறை வழங்கப்பட்டு வருவது வழமையானதாகும்.

அந்தவகையில் வவுனியா மாவட்ட பாெது வைத்தியசாலையில் வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தந்து விடுதிகளில் தங்கியிருந்து சேவையாற்றும் தாதியர்களே அதிகமாக இருக்கின்றார்கள்.

இவர்களுக்கு வாரத்தில் ஒருநாள் வழங்கப்படும் விடுமுறையில் இவர்கள் வீட்டுக்கு செல்ல முடியாது. இதனால் ஒரு மாதத்தில் வரும் விடுமுறை நாட்களில் சேவையாற்றி பின்னர் விடுமுறை நாளில் சேவையாற்றிய நாட்களையும் சேர்த்து குறைந்தது ஐந்து நாட்கள் மாதம் ஒன்றில் விடுமுறை எடுத்து தமது சாெந்த இடங்களுக்கு சென்று வருவார்கள்.

இதுவே அனைத்து மாவட்ட வைத்தியசாலைகளிலும் கடைபிடிக்கப்பட்டு வரும் முறையாகும். வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும் இவ்வாறே நடைமுறையிலிருந்தது.

ஆனால் திடீரென இவ்வாறு மாதத்தில் தொடர்ச்சியான விடுமுறை தரமுடியாது எனவும், வாரத்தில் வருகின்ற ஒரு நாள் மட்டுமே விடுமுறை எடுக்கமுடியும் எனவும் நேற்றையதினம் இடம்பெற்ற விடுதி சகோதரிகளுக்கான கூட்டத்தில் வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளதாக தாதியபரிபாலகர் கூறியுள்ளார்.

இதனால் வெளி மாவட்டங்களிலிருந்து வந்து வவுனியா வைத்தியசாலையில் பணிபுரியும் தாதியர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

குறித்த விடயம் தொடர்பாக வைத்தியசாலை பணிப்பாளர் கவனத்திலெடுத்து தாதியர்களின் நலனுக்காக வழிவகை செய்துதருமாறு தாதியர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *