அத்தியாவசிய தேவை தவிர்ந்து வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது.
குறிப்பாக மேல் மாகாணத்தில் இறப்புகள் மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது.
வடக்கு மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக நோய் அறிகுறிகளுடன் கூடிய தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றார்கள்.
இது ஒரு ஆபத்தான விடயம்.
எனவே பொதுமக்கள் அத்தியாவசிய தேவை தவிர்ந்து வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்.
வடக்கு மாகாணத்தில் உள்ள ஒன்பது கொரோனா இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களும் நிரம்பிக் காணப்படுகின்றன.
யாழில் இந்து ஆலயங்களில் நடாத்தப்பட்ட நிகழ்வுகளின் காரணமாக பல கொத்தணிகளுடன் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
எனவே பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுதல் மிகவும் அவசியமாகும் என தெரிவித்தார்.