புங்குடுதீவு பகுதியில் வசிக்கும் வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்களின் நிலை குறித்து சமூகம் ஊடகத்தின் ஊடாக வெளிவந்த செய்தியை அடுத்து அப்பகுதியில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 7 குடும்பங்களுக்கு கனடா வாழ் புலம்பெயர் உறவுகளால் வீடுகள் அமைத்து வழங்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதி மக்கள் அடிப்படை வசிதிகள் அற்று அன்றாடம் படும் துயரத்தை, அவர்களின் வாழ்க்கை போராட்டத்தை சமூகம் ஊடகம் அண்மையில் வெளிக்கொண்டுவந்திருந்தது.
அவ் விடயத்தை அறிந்த கனடா வாழ் புலம்பெயர் உறவுகள் உதவி செய்ய முன்வந்திருந்தனர்.
இதனடிப்படையில், ஆரம்ப கட்டமாக தெரிவுசெய்யப்பட்ட 6 குடும்பங்களுக்கான வீடுகள், கனடாவை தலைமையகமாக கொண்டு இயங்கும் புங்குடுதீவு இறுப்பிட்டி அபிவிருத்தி சங்கத்தின் நிதிப்பங்களிப்பில் அமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டிருந்தன.

இதற்கு மேலதிகமாக சில வீடுகளை கட்டிக்கொடுப்பதற்கு கனடா வாழ் Apollo rent a car நிறுவன உரிமையாளர் சிறீநிபாலா மற்றும் SQM Janitorial Services நிறுவன உரிமையாளர் காம்ராஜ் ஆகியோர் முன்வந்திருந்தனர்.
அந்தவகையில், கொடையாளர் சிறீநிபாலாவின் முழு நிதிப் பங்களிப்பான சுமார் ஏழரை இலட்சம் ரூபா செலவில் கட்டி முடிக்கப்பட்ட வீடு, அவரது தந்தை சின்னப்பு பாலசிங்கத்தின் நினைவாக கடந்த ஜூலை மாதம் 30 ஆம் திகதி பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.
மேலும் கொடையாளர் காம்ராஜின் நிதிப்பங்களிப்பிலான வீட்டுத்திட்டங்கள் அடுத்த கட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.