
பொது இடங்களில் குப்பை வீசுவோருக்கு 14 நாள் விளக்கமறியலுடன் 50 ஆயிரம் ரூபா தண்டப்பணம்; கல்முனை மாநகர சபை எச்சரிக்கை

(அஸ்லம் எஸ்.மௌலானா)
கல்முனை பிரதான வீதியின் சில முக்கிய இடங்களில் குப்பை வீசுவோர் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ள கல்முனை மாநகர சபை, சம்மந்தப்பட்டோர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, 14 நாட்கள் விளக்கமறியலுடன் 50 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் மேலும் தெரிவிக்கையில்;
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் கடந்த காலங்களை விட தற்போது திண்மக்கழிவகற்றல் சேவை சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கல்முனைக்குடி வலயத்தைப் பொறுத்தளவில் ஒவ்வொரு வீதியிலும் வாரத்திற்கு ஒரு தடவையாவது குப்பை சேகரிப்புக்காக திண்மக்கழிவகற்றல் வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. அத்துடன் பிரதான வீதியில் நாளாந்தம் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.
இந்நிலையில், பிரதான வீதியின் சாஹிபு வீதிச் சந்தி, ஹனிபா வீதிச் சந்தி, டொக்டர் றிஸ்வி வீதிச் சந்தி, மத்ரஸா வீதிச் சந்தி, நகர மண்டப வீதிச் சந்தி, ஸம் ஸம் லேன் சந்தி, நியூ றோட் சந்தி மற்றும் மருதமுனை மக்கள் மண்டபத்திற்கு முன்பாகவும் இன்னும் சில பொது இடங்களிலும் சிலரால் தினமும் பொறுப்பின்றி குப்பைகள் வீசப்படுகின்றன.
சட்டத்தை மதிக்காமலும் பொதுநலன் சார்ந்த உணர்வு எதுவுமில்லாமலும் சில அறிவிலிகள் செய்கின்ற இந்த ஈனச்செயல் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். இது தணடனைக்குரிய குற்றமாகும். இவர்களது கண்டிமூடித்தனமான இந்த மோசமான செயற்பாட்டினால் நகரின் முக்கிய இடங்கள் மாசுபட்டு, துர்நாற்றம் வீசுவதுடன் மிக அசிங்கமாகவும் காட்சியளிக்கின்றன. மேலும், பிரதான வீதியால் செல்கின்ற உள்ளூர், வெளியூர் பயணிகளுக்கு அருவருப்பை ஏற்படுத்துவதுடன் முழு நகர மக்களுக்கும் அவப்பெயர் ஏற்படுகின்றது.
ஆகையினால், மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவை வாகனங்கள் தங்களது வீதிகளுக்கு வரும்வரை குப்பைகளை அவரவர் வீடு, வாசல்களில் வைத்துக் கொள்ளுங்கள். குப்பைகளை உடனுக்குடன் வெளியேற்றி விட வேண்டும் என்பதற்காக இவ்வாறான பொது இடங்களில் அவற்றை வீசி, தொடர்ந்தும் அறிவிலிகளாக நடந்து கொள்ளாதீர்கள்.
இனிவரும் நாட்களில் வீதிகளில் குப்பை வீசுவோரைக் கைது செய்வதற்காக பொலிஸ், இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன் சி.சி.ரி.வி. காட்சிகளும் பெறப்படவுள்ளன. அத்துடன் இவர்கள் மீது நீதிமன்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, 14 நாட்கள் விளக்கமறியலுடன் 50 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் விதிக்கப்படும்.
ஜனாதிபதி மற்றும் பொலிஸ் மா அதிபர் போன்றோரின் அறிவுறுத்தல்களின் பேரில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இது விடயத்தில் கடுமையான கவனத்தை செலுத்தவுள்ளனர். பொது இடங்களில் குப்பை வீசுவோர் விடயத்தில் நீதிமன்றமும் கடுமையாக செயற்படும் என்பதையும் அறியத் தருகின்றேன்.
மேலும், இவர்கள் பற்றிய விபரங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரங்கப்படுத்தப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.