
தான் மரணமடைந்துவிட்டதாக பரவும் வதந்திகளால் கடுப்பான ரஜினி பட நடிகை தான் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலியை சேர்ந்தவர் நடிகை ஷாரதா. சரஸ்வதி தேவி என்ற பெயரை கொண்ட இவர் சினிமாவுக்காக ஷாரதா பெயரை மாற்றிக் கொண்டார்.
தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்து சினிமாவுக்கு வந்த ஷாரதா, தெலுங்கில் 1960 முதல் 1990 வரை பல படங்களில் நடித்துள்ளார்.
அக்கினேனி நாகேஸ்வர ராவுடன் அவர் நடித்த இடறு மிட்ருலு படம் பெரும் ஹிட்டானது. ஷாரதாவின் சினிமா கேரியரில் முதல் பிரேக்கை கொடுத்த படம் இந்தப் படம்தான். இதன் மூலம் தெலுங்கு மட்டுமின்றி மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகிலும் பிரலமானார்.
முன்னணி நடிகையாக வலம் வந்த ஷாரதா 1968ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான துலாபாரம் படம், 1972ஆம் ஆண்டு வெளியான ஸ்வயம்வரம் படம் மற்றும் 1977 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான நிமஜனம் என்ற படத்திற்காகவும் என மொத்தம் மூன்று முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார்.
சிவாஜி, எம்ஜிஆர், ரஜினி என பல நடிகர்கள்
மேலும் தமிழக அரசின் விருது, கேரள அரசின் விருது, நந்தி விருது உட்பட ஏராளமான விருதுகளை குவித்துள்ளார். தமிழில் சிவாஜி கணேசன், எம்ஜிஆர், ரஜினிகாந்த் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
தமிழில் குங்குமம், துளசி மாடம், அருணகிரிநாதர், வாழ்க்கை வாழ்வதற்கே, துலாபாரம், ஞான ஒளி, நினைத்ததை முடிப்பவன், என்னை போல் ஒருவன், சரித்திர நாயகன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்துடன் மிஸ்டர் பாரத் படத்தில் நடித்துள்ளார் நடிகை ஷாரதா. இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு அம்மாவாக நடித்தார். இந்த படத்தில் அவரது நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது. 40 வருடங்களுக்கு முன்பு தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக வலம் வந்த ஷாரதாவுக்கு தற்போது 76 வயதாகிறது.
இந்நிலையில் கடந்த இரு நாட்களாக நடிகை ஷாரதா இறந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது. இதனை தொடர்ந்து பலரும் சாரதாவுக்கு போன் செய்து விசாரிக்க ஆரம்பித்தனர். இதனால் வருத்தமடைந்த ஷாரதா, தவறான செய்திகளை பரப்பியவர்கள் மீது கடுப்பாகியுள்ளார்.
தனது உடல்நிலை குறித்து பரவும் வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தகவல் வெளியிட்டுள்ளார் ஷாரதா. அதாவது, “நான் உயிருடன் நலமாக தான் இருக்கிறேன். எனக்கு எந்த நோய் நொடியும் இல்லை. அதனால் வதந்திகளை நம்ப வேண்டாம். ஒருத்தரை பற்றி வதந்தி பரப்ப வேண்டும் என்பதற்காக இதுபோன்ற கீழ்த்தரமான நடவடிக்கைகளில் இறங்க கூடாது” என காட்டமாக கூறி இருக்கிறார் ஷாரதா.