பருவநிலை மாற்றம் அச்சம்: அழிவின் விளிம்பில் இருக்கும் நாடுகள் கவலை!

புவி வெப்பமடைதல் உலகின் சில பகுதிகளை வாழமுடியாததாக மாற்றிவிடும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் அறிக்கை வெளியானதையடுத்து, பருவநிலை மாற்றம் குறித்து உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட்டால் தங்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று அழிவின் விளிம்பில் இருக்கும் நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.

இதுகுறித்து காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் பாதிக்கப்படக்கூடிய சுமார் 50 நாடுகளின் பிரதிநிதியாக உள்ள மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் கூறுகையில்,

‘வேறொருவர் வெளியிடும் கார்பனுக்காக நாங்கள் எங்கள் உயிரைக் கொடுக்கிறோம். ஐ.பி.சி.சி.யின் கணிப்புகள் அழிவின் விளிம்பில் அமைந்துள்ள தங்களது நாட்டுக்கு பேரழிவை ஏற்படுத்தும்’ என கூறினார்.

உலகின் தாழ்வான நாடான மாலைத்தீவில், பல தீவுகள் கடல் மட்டத்தில் இருந்து சில சென்டி மீட்டர் உயரத்திலேயே அமைந்துள்ளன.

பூமியின் வெப்பநிலை அதிகரிப்பதற்கு மனிதர்களே காரணம் என்பதற்கு தெளிவான ஆதாரம் இருப்பதாக ஐபிசிசியின் அறிக்கை கூறுகிறது.

அடுத்த இரண்டு தசாப்தங்களுக்குள், தொழில் புரட்சிக்கு முந்தைய நிலைகளை விட 1.5 செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது.

இது கடல் மட்டம் அரை மீட்டர் அளவு வரை உயர வழிவகுக்கும், ஆனால் இந்த நூற்றாண்டின் இறுதியில் 2 மீட்டர் உயரம் கூட அதிகரிக்கலாம் என்பதை மறுக்க இயலாது.

வெப்ப அலைகள், அதிக மழை மற்றும் வறட்சி மிகப் பரவலாகவும் தீவிரமாகவும் மாறும் என்று ஐபிசிசியின் சமீபத்திய அறிக்கை கூறுகிறது.

ஐ.நா.வின் பொதுச் செயலாளர் அதை மனித குலத்துக்கான சிவப்புக் குறியீடு என்று அழைக்கிறார்.

2015 பரிஸ் ஒப்பந்தத்தின்படி 190 க்கும் மேற்பட்ட நாடுகள் உலக வெப்பமயமாதலை தொழில்துறைக்கு முந்தைய நிலையில் இருந்து கூடுதலாக 2 செல்சியஸ் அல்லது 1.5 செல்சியஸுக்குள் மட்டுப்படுத்த ஒப்புக்கொண்டன.

ஆனால், கார்பன் உமிழ்வு கடுமையாகக் குறைக்கப்படாத வரை, இந்த நூற்றாண்டுக்குள்ளாகவே மேற்கூறிய இரண்டு இலக்குகளும் மீறப்படும் என்று இப்போது வெளியாகி இருக்கும் ஐபிசிசி அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *