முழு முடக்கமா? அல்லது ஊரடங்கா? அதிரடி அறிவிப்பு விரைவில்

கொரோனா வைரஸ் தொற்றின் வேகம் அதிகரித்துள்ளமையால், நாட்டை முழுமையாக முடக்குவதற்கு அல்லது மாகாணங்களுக்கு இடையிலான கட்டுப்பாடுகளை இன்னும் கடுமைப்படுத்துவது தொடர்பிலான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்னும் சில மணிநேரத்தில் உத்தியோகபூர்வ அறிவிப்பொன்று வெளியாகுமென உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிலவேளைகளில் நாட்டை முழுமையாக முடக்கும் அறிவிப்பாகக் கூட அது அமையலாம் என அந்தக் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்றின் வேகம், மரணங்கள் அதிகரிப்பு ஆகிவற்றையும், நாட்டை முழுமையாக நான்கு வாரங்களுக்கு முடக்கிவிடுமாறு சுகாதார தரப்பினர் உள்ளிட்ட நிபுணர்கள் விடுத்திருக்கும் அழுத்தங்கள் தொடர்பில் ஆராயப்பட்டே இவ்வாறான தீர்மானத்துக்கு செல்வதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெறும் கலந்துரையாடலைத் தொடர்ந்து, மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் சாத்தியமான பயணக் கட்டுப்பாடுகள் இன்றோ அல்லது நாளையோ விதிக்கப்படும் என அறிய முடிகிறது.

புதிய பயணக் கட்டுப்பாடுகள் அல்லது ஊரடங்கு உத்தரவு குறித்த முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிகளின் விரைவான உயர்வு மற்றும் அதிகரித்து வரும் மரணங்கள் டெல்டா திரிபால் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உடனடி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், நாளாந்த மரண எண்ணிக்கை 200 ஐத் தாண்டும் என்பதோடு நாளாந்தம் 5,000 க்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் கண்டறியப்படுவார்கள் என்று வைத்தியர்கள் கணித்துள்ளனர்.

டெல்டா திரிபால் பாதிக்கப்பட்ட சில நகரங்கள் மற்றும் நாடுகள் முடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *