2023 ஆம் ஆண்டு ரணிலின் ஆட்சி; அனைத்து பிரஜைகளையும் சுபீட்சம் அடையச் செய்வார்! வஜிர அபேவர்தன அதீத நம்பிக்கை

முன்னாள் பிரதமரான ரணில் விக்கிரமசிங்க 2023 ஆம் ஆண்டு இறுதியில் ஆட்சிக்கு வந்து, நாட்டை மீண்டும் கட்டியெழுப்பி அனைத்து பிரஜைகளையும் சுபீட்சம் அடையச் செய்யும் யுகத்தை ஆரம்பிப்பார் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பத்தேகம தேர்தல் தொகுதிக்குட்பட்ட சந்தரவல ஹல்பதொட்ட முன்பள்ளி திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

இலங்கையின் பொருளாதாரத்திற்கு தற்போதைய அரசாங்கத்தினால் ஏற்பட்டுள்ள சேதத்தை பணத்தை அச்சிட்டு மக்களுக்கு விநியோகிப்பதன் மூலம் தீர்க்க முடியாது

புத்தாண்டில் அரசாங்கம் வழங்கும் நிவாரணப் பொதியில் இருந்து டொலர்கள் நாட்டுக்குள் வராது, பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் விலை குறையாது. விவசாயத்திற்கு தேவையான அத்தியாவசிய உரங்கள் வழங்கப்படுவதில்லை.

மருந்துகளை இறக்குமதி செய்ய தனியார் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், வரியிலிருந்து பொருட்களை விடுவிக்கவும், மருந்துகளை இறக்குமதி செய்யவும் டொலர்கள் இருக்க வேண்டும்.

இன்றைய நிலவரப்படி ஒரு டொலரின் உண்மையான மதிப்பு ரூ.252 தாண்டியுள்ளது. இந்த நிலையில் புதிய வருடத்தில் மக்கள் பாரிய அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் வினைத்திறனற்ற வேலைத்திட்டத்தினால் நாடு நாளுக்கு நாள் சோகமான நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது.

விவசாய சமூகத்திற்கு உரம் வழங்காமல் பணம் கொடுத்தால் மக்கள் பணத்தை நுகர முடியாது.

இன்று சந்தையில் ஒரு கிலோ பச்சை மிளகாய் விலை ரூ.1,300 ஆக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு காய்கறியின் விலையும் ரூ 500 மேல் உள்ளது.

இந்த நிலைமைகளின் கீழ் வாழ்வது மக்களுக்கு கடுமையான பிரச்சனையாக மாறியுள்ளது.

அரசாங்கத்தின் தேசியக் கொள்கைகளில் உள்ள தவறுகளை பொது ஊழியர்களின் மீது சுமத்தி அவர்களை பதவியில் இருந்து நீக்குவதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.

அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்குவதன் மூலமும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது.

இந்த அமைச்சரோ, அந்த அமைச்சரோ நல்லவர் இல்லை என சொல்வதில் அர்த்தமில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply