இலங்கையில் கொரோனா தொற்று தீவிரமடைந்த நிலையில், திருக்கோவில் திருவிழாக்களை ஒத்தி வைக்குமாறு அல்லது பக்தர்கள் இன்றி நடாத்துமாறு சைவ மகா சபை உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.
இலங்கையில் தினமும் 100 மரணங்கள் பதிவாகி வரும் நிலையில், சைவத் திருக்கோவில்களில் சுகாதார நடைமுறைகளை புறக்கணித்து பலர் ஒன்று கூடி வருவதும் பெரும் அச்சுறுத்தலாகவே காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் பக்கச்சார்பான கட்டுப்பாடுகள் தொடர்பாக ஆதங்கம் எழுந்தாலும், இப்போது உள்ள நிலைமையின் தீவிரத்தை சைவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
டெல்டா பரவல், அதிகரித்த கொரோனா தொற்றுக்கள் மற்றும் கொரோனா மரணங்கள், நாட்டில காணப்படும் ஒட்சிசன் தேவைப்பாடு, நிரம்பி வழியும் வைத்தியசாலைகள் என நாடு மிகவும் அபாய கட்டத்தில் உள்ளது.
இந்நேரம் பெருந் திருவிழாக்கள், ஒன்றுகூடல்களை தவிர்ப்பது காலத்தின் கட்டாயமாகும்.
இந்த முக்கிய கடமையை திருக்கோவில்கள் சரிவர ஆற்ற அனைத்து சைவப் பெரியார்களும் அமைப்புக்களும் குரல் கொடுத்து ஒழுங்குபடுத்த வேண்டியது அவசியமாகும்.
அத்துடன், அதிகளவான உயிரிழப்புகளிற்கு சமயம் பழி ஏற்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என இந்த பெருந் தோற்று காலத்தில் வினயமாக சுட்டி நிற்கின்றோம்-என மேலும் தெரிவித்துள்ளனர்.