
ஆலையடிவேம்பு ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் நடைபெறாது -நிருவாக சபைக் கூட்டத்தில் தீர்மானம்
வி.சுகிர்தகுமார்
அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் நாட்டின் கொரோனா தொற்று நிலை காரணமாக இம்முறை நடைபெறாது என ஆலயத்தின் தலைவர் ஆர்.ஜெகநாதன் தெரிவித்தார்.
பதிலாக விசேட அபிசேக பூஜைகள் மாத்திரம் நடைபெறும் எனவும் இதில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாது எனவும் குறிப்பிட்டார்.
ஆலய மகோற்சவம் தொடர்பாக நேற்று (10) இடம்பெற்ற ஆலய நிருவாக சபைக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.
ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை(12) ஆரம்பமாகவுள்ள நிலையில் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா அச்ச நிலை தொடர்பிலும் மக்களது பாதுகாப்பு தொடர்பிலும் பொறுப்புள்ள நிருவாக சபை எனும் அடிப்படையில் இவ்வாறான தீர்மானம் மேற்கொள்ள வேண்டிய நிலை உருவானதாகவும் அவர் தெரிவித்தார்.
இத்தீர்மானத்தை ஏற்று பொதுமக்கள் புரிந்துணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் நாட்டின் நிலை கருதி நடந்து கொள்வது ஒவ்வொருவரது கடமை எனவும் கேட்டுக்கொண்டார்.
இதேநேரம் நாட்டின் நிலை சீரடைந்து கொரோனாவின் பிடியிலிருந்து நாட்டும் மக்களும் நாடும் மீள வேண்டும் என பிரார்த்;தனை செய்வதாகவும் அடுத்த வருடம் மகோற்சவம் காண முருகப்பெருமான் அருள் புரிய வேண்டும் என அனைவரையும் இணைந்து பிராhத்திக்குமாறும் அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.