மடு திருத்தலத்தின் ஆவணி திருவிழாவில் பங்கேற்பதற்கான பயணங்களை நிறுத்துமாறு கோரிக்கை

மடு திருத்தலத்தின் ஆவணி திருவிழாவில் கலந்துகொள்ள நீண்ட பயணங்களை மேற்கொண்டு வருகின்றவர்கள் தமது பயணங்களை நிறுத்துமாறு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா தொடர்பாக ஆராயும் அவசர கலந்துரையாடல் மடு திருத்தலத்தில் இன்று (புதன்கிழமை) மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது.

இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா எதிர்வரும் 14ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மாலை ஆராதனையும் அதனைத் தொடர்ந்து தூய நற்கருணை பணியையும், நடத்தி தூய நற்கருணை ஆசியையும் வழங்குவோம்.

ஆவணி மாதம் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மருதமடு அன்னையின் திரு விழாவாகிய விண்ணேற்பு திருவிழா திருப்பலி காலை 6.15 மணிக்கு ஆயர்கள் தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்படும்.

திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனி யும் திருச்சொரூப ஆசிர்வாதமும் வழங்கப்படும்.

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

அரசாங்கத்தினதும் சுகாதார திணைக்கள அதிகாரிகளினதும் சுகாதார வழிகாட்டுதல்களின்படி நாங்கள் நடந்துகொள்ள வேண்டும்.

அன்றைய தினம் மடு அன்னையின் ஆவணித் திருவிழா திருப்பலிகள் நான்கு ஒப்புக் கொடுக்கப்படும்.

குறித்த திருப்பலிகளில் மொத்தமாக 150 நபர்கள் மாத்திரம் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே இக்கால கட்டத்தில் மாகாணங்களுக்கு இடையே உள்ள பயணக் கட்டுப்பாடுகள் ஓரளவு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் மடு அன்னையின் திருவிழா அன்று மடு திருத்தலத்திற்கு வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தர முடியாது.

மடு வீதி வரை வந்தாலும் மடு திருத்தலத்திற்குள் செல்ல முடியாமல் பாதுகாப்பு தரப்பினரால் திருப்பி அனுப்பப்படுவார்கள்.

ஏனைய நாட்களில் நீங்கள் ஆலயத்திற்கு காலையில் வந்து மாலையில் திரும்பிச் செல்ல முடியும். தங்கி நிற்க முடியாது.  பலர் தூர இடங்களில் இருந்து வருகை தர முயற்சிக்கின்றனர். அவ்வாறு வருகின்றவர்கள் தமது வருகையை நிறுத்திக்கொள்ளுங்கள். இங்கு வந்தால் தங்க இடம் இல்லை. திருவிழாவிற்கு ஆலயத்தினுள் செல்ல முடியாத நிலை ஏற்படும்.

மேலும் மடு திருத்தலத்தை அண்மித்த கிராமங்களான பண்டிவிரிச்சான், பரப்புக்கடந்தான், பாலம்பிட்டி, தட்சணா மருதமடு போன்ற கிராமங்களுக்கு கூட செல்ல முடியாத நிலை உள்ளது.

எனவே பல்வேறு பிரச்சினைகள் உள்ளமையினால் உங்களின் நீண்ட பயணத்தை நிறுத்தி உங்கள் வீடுகளில் இருந்து தொலைக்காட்சி, இணையத்தளங்கள் ஊடாக திருவிழாவை பார்க்க முடியும்” என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *