
கடந்த 2020 ஆம் ஆண்டு இறுதியில் கிளிநொச்சி முட்கொம்பன் பகுதியில் 6 பேர் கைது செய்யப்பட்டு இன்று வரை விடுதலை செய்யப்படவில்லை என உறவுகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தொழில் பயிற்சி நிறுவனத்தில் கல்வி கற்கும் ,6 ஆண் மாணவர்கள் இவ்வாறு சி.ஐ.டியினரால் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக உறவுகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட கணவர் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை என மனைவி எஸ்.எம்.நூர்யா கவலை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
2008 ஆம் ஆண்டு கொழும்பில் எனது கணவர் கைது செய்யப்பட்டார்.எனக்கு 3 பிள்ளைகள்.
நான் செட்டிக் குளத்தில் வசிக்கின்றேன்.தற்போது கணவர் கண்டி சிறைச் சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
பல வருடங்களாக வழக்கு நடைபெறுகிறது .இன்னமும் அவர் அவர் விடுதலை செய்யப்படவில்லை – என்றார்.
தமிழ் அரசியல் கைதியாக கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட கோமகன் கருத்து தெரிவிக்கையில்:
பல துன்பங்களுக்கு மத்தியில் என்னை விடுதலை செய்தார்கள்.மேலும் 16 பேரை விடுதலை செய்துவிட்டு ,பலரை விடுவித்தது போல சர்வதேசத்துக்கு அரசு காட்டியுள்ளது.ஒவ்வொரு பொங்கல்,புதுவருடதுக்கு நாம் எமது குடும்பத்துடன் சேர மாட்டோமா என்று ஏங்குகின்றோம்.
ஆனால் இன்று வரை தமிழ் அரசியல் கைதிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் கொலை குற்றவாளிகள் கூட விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஆகவே எமது உறவுகளும் விடுவிக்கப்படவேண்டும்.சித்திரை புதுவருட பிறப்புக்கும் முன்னர் என்றாலும் அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றார்.
மேலும் நிகழ்வில் சிறைக்கூண்டு உருவம் வடிவமைக்கப்பட்டு அதற்கு உள்ளே பொங்கல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
நிகழ்வில் சர்வ மத தலைவர்கள்,தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கெ சிவாஜிலிங்கம் ,தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன்,யாழ் மாநகர துணை முதல்வர் து.ஈசன் ,தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள்,என பலர் கலந்து கொண்டுள்ளனர்.



