
ஆட்சி அமைத்து மிகக் குறுகிய காலப்பகுதியிலேயே மக்கள் ஆதரவை இழந்து அரசியல், பொருளாதாரம், சுகாதாரம் என்று அனைத்து வழிகளிலும் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கின்றார் கோட்டாபய ராஜபக்ஷ. உள்ளக ரீதியாகவும் வெளியக ரீதியாகவும் ராஜபக்ஷ அரசாங்கம் எதிர்கொண்டுள்ள சவால்கள் என்ன என்பதே இன்றைய நிஜத்தின் நிழல்.
இலங்கையின் தற்போதைய அரசியல் பொறிமுறையில் மாற்றம் அவசியமாகியுள்ளது. அவ்வாறான அரசியல் கலாசாரம் உருவாக்கிக் கொண்டுள்ளதை நாம் அவதானிக்கின்றோம். புரட்சிக்கான ஆரம்பம் தெளிவாகத் தெரிகின்றது. அதற்கான ஒத்துழைப்புக்களை வழங்க நாமும் ஒன்றிணைவோம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் கல்வி சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி இராஜாங்க அமைச்சுப் பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
நான் மக்களின் உண்மையான பிரச்சினைகளையும், அவர்கள் படும் கஷ்டத்தையுமே கூறினேன். நான் கூறியதில் எந்தவித பொய்களும் இல்லை என்பது சகலருக்கும் தெரியும். நாட்டில் விலை வாசியைப் பாருங்கள்.
நாட்டில் மரக்கறி மற்றும் உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிக்க காலநிலையோ, அனர்த்தமோ காரணம் அல்ல. விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர்கள் எடுத்த தவறான தீர்மானமே காரணமாகும்.
சரியான திட்டமிடல் இல்லை. எத்தனை வர்த்தமானி வெளியிடப்பட்டது. அதில் எத்தனை வர்த்தமானிகள் மீளவும் பெற்றுக்கொள்ளப்பட்டன. இவை முறையான ஆட்சிக்கான அடையாளங்கள் அல்ல.
உணவுத் தட்டுப்பாட்டிற்கு விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர்களே காரணம் என்று வெளிப்படையாகக் கூறினேன். அதில் எந்தத் தவறும் இல்லை. அதே நிலைப்பாட்டிலேயே இப்போதும் உள்ளேன் என்று தனது முடிவில் உறுதியாக உள்ளார் சுசில் பிரேமஜயந்த.
கோட்டாபய அரசாங்கம் ஒரு தோற்றுப்போன அரசாங்கம் எனவும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களும் தோற்று விட்டார்கள் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடுமையாகச் சாடியுள்ளார்.
ஒரு நாட்டின் அரசானது மக்களின் அத்தியாவசியமான தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியதாக செயற்பட வேண்டும்.
வெளிநாட்டில் இருந்து பொருட்களைக் கொள்வனவு செய்து இந்த மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்க முடியாது இந்த அரசாங்கம் திண்டாடுகின்றது.
குறிப்பாக உணவு, பானங்களை நாட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலை காணப்படுகின்றது. அரசாங்கத்திற்கு எதுவுமே செய்யமுடியாத நிலை காணப்படுகின்றது. பொதுவாக குழந்தைகள் தாய்மாருடைய போசாக்கு மட்டம் குறைந்திருக்கின்றது.
அவர்களுக்குரிய பால் மா மற்றும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இந்த கோட்டாபய அரசாங்கம் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, உணவு, எரிவாயு, எரிபொருள், உரம் போன்ற பிரச்சினைகள் இந்த நாட்டு மக்களால் உருவாக்கப்பட்ட பிரச்சினைகள் அல்ல. இவை அனைத்தும் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட பிரச்சினைகள்.
அவர்களைப் பற்றிப் பேசினால் கோபம் வரும். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை நடத்திவிட்டு குற்றச்சாட்டை என் மீது சுமத்த முயல்கின்றனர் என்று ராஜபக்ஷக்கள் மீது புதுக் குண்டு போட்டுள்ளார் முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன.
நான் ஜனாதிபதியாக இருந்தபோது ஐந்து ஆணைக்குழுக்களை நியமித்தேன்.
ஆனால் மோசடி மற்றும் ஊழல் தொடர்பாக நான் நியமித்த நான்கு ஆணைக்குழுக்கள் பற்றி எவரும் பேசுவதில்லை. இவை அனைத்தும் ஆணைக்குழுக்களின் பெட்டியில் உள்ளன.
என்னைச் சிறையில் அடைக்க நினைப்பவர்கள் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் ஆணைக்குழு பற்றிப் பேசுகிறார்கள்.
குறித்த ஆணைக்குழு பற்றி ஒரு நாள் உங்களுக்குச் சொல்ல எனக்கு வாய்ப்பு கிடைக்கும். அப்போது அதைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்வேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்றில் இரண்டு தனிச்சிங்கள பெரும்பான்மையோடு வெற்றி பெற்றதாக கூறிக்கொள்ளும் ஓர் அரசாங்கம் கடந்த ஆண்டு முழுவதிலும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய வெற்றிகள் எதனையும் பெறவில்லை. ஒரே ஒரு விடயத்தில் மட்டும் துலக்கமான வெற்றியை காட்டியது. அது என்னவென்றால் தடுப்பு ஊசி ஏற்றும் நடவடிக்கைகளில் உலகிலுள்ள வளர்ச்சியடைந்த நாடுகளை விடவும் அது வினைத்திறனோடு செயல்பட்டிருக்கிறது. அண்மையில் கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் ருவிற் பண்ணியது போல, வளர்ச்சி அடைந்த அமெரிக்கா போன்ற நாடுகளை விடவும் முன்னேற்றகரமான விதத்தில் இலங்கைத்தீவு தடுப்பூசிகளைப் போட்டிருக்கிறது.அதாவது அரசாங்கத்தின் இராணுவ மயப்படுத்தும் கொள்கையின் அடிப்படையில் கிடைத்த ஒரே ஒரு வெற்றி அதுதான். தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கைகளை படைத்தரப்பிடம் ஒப்படைத்ததன் மூலம் அப்படி ஒரு வெற்றி கிடைத்தது. ஆனால் மற்ற எல்லா விடயங்களிலும் கடந்த ஆண்டு அரசாங்கத்தைப் பொறுத்தவரை ஒரு தோல்வி ஆண்டாகவே காணப்படுகிறது.
இந்நிலையில், இலங்கைக்கு கடந்த 8, 9ஆம் திகதிகளில் உத்தியோக பூர்வமான விஜயமொன்றை மேற்கொண்டு சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் யி வருகை தந்திருந்தார்.
இந்த விஜயத்தின் போது எவ்விதமான நிகழ்ச்சி நிரல்கள் காணப்படுகின்றது என்பதையே சீன வெளிவிவகார அமைச்சோ அல்லது இலங்கைக்கான சீன தூதரகமே வெளியிடுவதை தவிர்த்து இரகசியம் காத்து வந்தன.
பொதுப்படையில், இலங்கைக்கும், சீனாவுக்கும், இடையிலான இருதரப்பு இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 65ஆண்டுகளாகின்றமையையும், அரசி, இறப்பர் ஒப்பந்தம் கைச்சாத்தாக்கப்பட்டு 70ஆண்டுகள் பூர்த்தியையும் முன்னிட்டு ஏற்பாடான நிகழ்வில் பங்கேற்பதற்காகவே சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டது.
அவ்வாறான நிலையில் இலங்கைக்கு வருகை தந்திருந்த சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யியை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் அவருடைய சகபாடிகளான இராஜாங்க அமைச்சர் டி.வி.சாணக்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே ஆகியோரே வரவேற்றிருந்தனர்.
இங்கு, அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஏன் சீன வெளிவிவகார அமைச்சரை வரவேற்பதற்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிரேஷ்ட அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் போன்றவர்கள் வெளிநாட்டு அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பதவிகளில் இருக்கும் போது நாமல் அனுப்பி வைக்கப்பட்டமையானது ‘ராஜபக்ஷ’ குடும்பத்திற்குள் நாமலை முன்னிலைப்படுத்தும் செயற்பாடா என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.
இதேநேரம், இலங்கைக்கு வருகை தந்திருந்த சீன வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்களை சந்தித்ததோடு, துறைமுக நகரத்தில் மெரினா உல்லாச நடைபாதையையும் திறந்து வைத்திருந்தார்.
அத்துடன், துறைமுக நகரில் நடைபெற்ற நிகழ்விலும் கலந்து கொண்டுவிட்டு தனது விஜயத்தினை பூர்த்தி செய்து கொண்டு பெய்ஜிங்கிற்கு திரும்பியுள்ளார்.
சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி வருகை தருவதற்கு முன்னர் தான் சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 20ஆயிரம் மெற்றிக் தொன் உரத்தை, இலங்கை தரமற்றது எனக்கூறி நிராகரித்திருந்தது.
குறித்த உரத்தை கொண்டு வந்த கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் சுமார் 70 நாட்கள் நங்கூரமிட்டிருந்தது. எனினும் இலங்கை அரசாங்கம் சீனாவின் அழுத்தங்களுக்கு அடிபணியவில்லை.
மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலில் சீனா இட்டபோதும், யாழ்ப்பாணத்தில் உள்ள மூன்று தீவுகளில் ஆரம்பிக்கப்படவிருந்த சக்தி திட்டங்களை கைவிடுவதாக கூறியபோதும் இலங்கை அமைதியாக இருந்தது.
எனினும், சீனாவின் உரக்கப்பல் திரும்பிச் செல்ல வேண்டு என்று வலியுறுத்தப்பட்டது. எதிர்ப்புக்கள் அதிகமாகவும் சீனக் கப்பல் மீளத்திரும்பியது. ஆனால் வெறுங்கையுடன் செல்லவில்லை.
கொண்டு வந்த உரத்தினையும், கடலில் தங்கியிருந்தமைக்கான இழப்பீடாக 6.9 மில்லியன் டொலர்கள் கடன்களையும் பெற்றுக்கொண்டு விட்டடே அக்கப்பல் நகர்ந்திருக்கின்றது. அதன் பின்னர் தான் கறுப்பு பட்டியலில் இட்ட மக்கள் வங்கியையும் சீனா அப்பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது.
மறுபக்கத்தில், வடக்கு, கிழக்கு, மற்றும் தெற்கு மாகாணங்களில் சாதாரண பொதுமக்களுக்கு நன்கொடைகள் என்ற அடிப்படையில் பல மில்லியன் மானியங்களை வழங்கி வருகின்றது.
இலங்கையின் உண்மையான நண்பன் என்றும், இலங்கை மக்கள் மீது அதீத கரிசனை கொண்ட நாடு என்றும் தன்னைக் காண்பிக்கின்றது.
ஆனால், உரவிடயத்தில் சீனாவின் உண்மை முகம் வெளிப்பட்டு விட்டது. ஆகவே சீனா, எந்தவொரு விடயத்தினையும் முன்னெடுக்கின்றது என்றால் அதில் தன்னுடைய நலன்களுக்குத் தான் அதிகளவில் முக்கியத்துவத்தினை வழங்குவதாக இருக்கிறது.
அவ்வாறான பின்னணியில் சீன வெளிவிவகார அமைச்சர் வெறுமனே துறைமுக நகரின் நடைபாதையை திறந்து வைப்பதற்காகவா மாலைதீவிலிருந்து வருகை தந்திருப்பார்.
ஆகவே தான் அவருடைய வருகையின் உண்மையான காரணத்தினை வெளிப்படுத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தியும், மக்கள் விடுதலை முன்னணியும் பகிரங்கமாக வலியுறுத்துகின்றன.
ஏனென்றால் சீனாவின் உண்மையான முகம் கண்முன்னே இருக்கின்றது. சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்ட கடனை மீள செலுத்த முடியாமையினால், உகண்டாவிலுள்ள ஒரேயொரு சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகம், அந்த நாட்டு அரசாங்கத்திடமிருந்து இல்லாது போயுள்ளது.
உகண்டாவிடமிருந்து என்டபே சர்வதேச விமான நிலையம் இல்லாது போவதை தவிர்க்கும் வகையில், சீனாவுடன் 2015ஆம் ஆண்டு செய்துகொண்ட ஒப்பந்தத்தில் திருத்தங்களை மேற்கொள்ள உகண்டா முயற்சித்து வருவதாகவும் சில சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
என்டபே சர்வதேச விமான நிலையத்தை விஸ்தரிப்பதற்காக, சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து உகாண்டா, 200 டொலர்கள் மில்லியன் கடனாக பெற்றதாகவும், அந்த கடன் நிபந்தனைகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டாம் என, உகண்டா அரசாங்கத்தின் பிரதம சட்ட அதிகாரி, அந்த நாட்டு நிதி அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் ப்ளும்பெர்க் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளமை முக்கியமானது.
இந்நிலையில் சேதன விவசாயம் தனது 32 வருட அரசியல் வாழ்க்கையை பாழாக்கி விட்டது என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கவலை வெளியிட்டுள்ளார்.
பெரும்போகத்தில் சேதனைப் பசளை விவசாயத் திட்டம் தொடர்பாக விவசாயிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் நியாயமற்றவை என்று நான் நினைக்கவில்லை.
இந்தப் பணியைச் செயற்படுத்தச் சென்றபோது எனது 32 ஆண்டு கால அரசியல் பாழாகி விட்டது.
எனினும், இது நாட்டுக்கும் மக்களுக்கும் மிகவும் முக்கியமான வேலைத்திட்டம் என்பதால், எதிர்காலத்திலும் இந்த வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்ய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துடன் நான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என அவர் தெரிவித்தார்.
சீனாவை நம்பிக் கெட்டவர்களில் அமைச்சர் மஹிந்தானந்தவும் ஒருவர். காரணம் இறக்குமதி செய்யாத உரத்திற்கு 6.9 பில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை செலுத்த வேண்டிய இக்கட்டான நிலையை உருவாக்கியவர் மஹிந்தானந்தவே. சேதன விவசாயத்தை ஊக்கப்படுத்துவதாகக் கூறி விவசாயிகளின் வயிற்றில் அடித்தவர். இரசாயன உரப்பயன்பாட்டுக்கு மாற்றுத் திட்டம் இன்றி மஹிந்தானந்த முன்னெடுத்த இரகசிய திட்டங்களால் உரிய விளைச்சல் இன்றி நாடு உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது.
இதன் தாக்கம் இன்னும் சில வாரங்களில் பூதாகாரமாக வெடிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் இந்த ஆண்டும் இலங்கையர்களுக்கு சிறந்த ஆண்டாக இருப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்பதை இப்போதே கணக்கக்கூடியதாக உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் நாட்டை ஆள வந்தவர்கள் என்ன செய்யப்போகின்றார்கள் என்று.

