யுவதி துஷ்பிரயோகம் – ரிஷாட்டின் மனைவியின் சகோதரனை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரரான மொஹமட் ஷியாப்தீன் இஷ்மத்தை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதற்கமைய அவரை எதிர்வரும் 16ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதிவான் ரஜிந்ர ஜயசூரிய, சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

ரிஷாட் பதியுதீனின் கறுவாத்தோட்டம் பகுதியிலுள்ள வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த 16 வயதான சிறுமி ஹிஷாலினி மரணித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் மொஹமட் ஷியாப்தீன் இஷ்மத் 4ஆவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பில் கறுவாத்தோட்டம் பொலிஸார் நீதிமன்றில் விளக்கமளித்திருந்தனர்.

இதன்போது, 2016ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றியிருந்த யுவதியொருவர், சந்தேகநபரினால் இருவேறு சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

நுவரெலியாவிற்கு சுற்றுலா சென்றிருந்த சந்தர்ப்பத்தில், அங்குள்ள விருந்தகத்தில் வைத்து சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாகவும் பின்னர் கறுவாத்தோட்டம் பகுதியிலுள்ள வீட்டில் வைத்து இரண்டாவது முறையாகவும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளரிடம் கூறிய போதிலும் அது தொடர்பாக அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட யுவதி வழங்கிய முறைப்பாட்டில் உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் குறித்த யுவதியிடம் மீண்டும் வாக்குமூலம் பெறுவதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கருவாத்தோட்டம் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *