க்ளேன் மேக்ஸ்வெல் அதிரடி: மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணி 106 ஓட்டங்களால் அபார வெற்றி!

பிக் பேஷ் ரி-20 தொடரின் 56ஆவது லீக் போட்டியில், மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணி 106 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.

மெல்பேர்ன் மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணியும் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 273 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பிக் பேஷ் ரி-20 கிரிக்கெட்டில் அணியொன்று பதிவு செய்த அதிகப்பட்ச ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, க்ளேன் மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காது 154 ஓட்டங்களையும் மார்கஸ் ஸ்டொயினிஸ் ஆட்டமிழக்காது 75 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இப்போட்டியில் க்ளேன் மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காது 154 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதே பிக் பேஷ் ரி-20 கிரிக்கெட்டில் வீரரொருவர் பதிவுசெய்த அதிகப்பட்ச ஒட்டமாகும்.

ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியின் பந்துவீச்சில், ஜோஸ் கான் மற்றும் தொம்ப்சன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 274 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணி 106 ஓட்டங்களால் அபார வெற்றியை பதிவுசெய்தது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பென் மெக்டர்மோட் 55 ஓட்டங்களையும் ஆர்ஸி ஷோர்ட் ஆட்டமிழக்காது 41 ஓட்டங்ளையும் பெற்றுக்கொண்டனர்.

மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணியின் பந்துவீச்சில், பிராடி கோச் 3 விக்கெட்டுகளையும் வெப்ஸ்டர், டொம் ஒ கோனல் மற்றும் கிளின்ட் ஹின்ச்லிஃப் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 64 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 22 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 154 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட க்ளேன் மேக்ஸ்வெல் தெரிவுசெய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *