யாழ். பல்கலை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு; தீர்வு கிடைக்கும் வரை தொடரும்..!

யாழ். பல்கலைக்கழக ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கோரிக்கை செவிசாய்க்கப்படும் வரை பணிப்புறக்கணிப்பு தொடரும் என யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர் த. சிவரூபன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். பல்கலைக்கழக ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றினால் நேற்று (11) உயிரிழந்துள்ளார்.

பல்கலைக்கழகத்தின் பல்வேறு பிரிவுகளிலும் இருந்து தொற்றாளர்கள் அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளனர்.

எனினும் அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் எதுவித பொறுப்புமற்ற நிலையில் செயற்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நிலைமையை கருத்திற்கொண்டு பல்கலைக்கழக ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரியும், சுழற்சி முறையில் ஊழியர்களை பணிக்கு அழைக்க கோரியும் இன்று (12) பணி விடுப்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த விடயம் தொடர்பில் இன்று பல்கலைக்கழகம் நிர்வாகத்துடன் கலந்துரையாடவும் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் தாயாரக இருந்தது.

எனினும் பல்கலைக்கழக நிர்வாகம் இது குறித்து இதுவரையில் செவிசாய்க்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் தமது கோரிக்கைகள் கவனத்திற் கொள்ளப்படும் வரை தமது பணிப்புறக்கணிப்பு தொடரும் என யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர் த. சிவரூபன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply