தடுப்பூசி விடயத்தில் முஸ்லிம் மக்கள் வீண் சந்தேகம் கொள்ளத்தேவையில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் தெரிவித்தார்.
கொரோனா தொற்றில் பேருவளை மக்களை பாதுகாப்போம் எனும் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
பொறுப்புவாய்ந்த அரசாங்கம் என்ற வகையில் ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான இன்றைய எமது அரசாங்கம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இவ்வாறான கொரோனா தடுப்பூசிகளை வழங்கி வருகிறது.
ஒவ்வொரு இனத்துக்கும் வெவ்வேறு பெயர்களிலான கொரோனா தடுப்பூசிகள் வழங்கினால் அதைப்பற்றி யோசிக்க முடியும். அதுவின்றி யாரோ ஒரு சிலர் அரசியலுக்காக சொல்வதை கருத்தில் கொண்டு வீணாக தடுப்பூசி ஏற்றலை புறக்கணிக்க வேண்டாம்.
மேலும் அப்படி சொன்னவர்களெல்லாம் கொரோனா தடுப்பூசியை முதலிலே பெற்றுக்கொண்டு விட்டனர்.
அத்தோடு இன்று முஸ்லிம்களின் மரண வீதம் அதிகரித்துள்ள சூழலில்தான் நானும் நீங்களும் வாழ்கிறோம்.மேலும் புறக்கணித்த அதிகமானோர் மரணத்தை தழுவியுள்ள செய்திகளும் அன்றாடம் பத்திரிகைகளிலும் பார்க்கிறோம்.
எந்த முஸ்லிம் வைத்தியரும் இதனை ஏற்ற வேண்டாம் என எங்கேயும் தெரிவித்ததாக நான் கேள்விப்படவில்லை.மேலும் அதேபோல் பொதுமக்களுக்கு ஏற்றப்படுகின்ற கொரோனா தடுப்பூசிகள் அனைத்தும் உலக சுகாதார (WHO) அமைப்பினால் அங்கீகாரம் பெற்றவை என்பதை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும் .
அத்தோடு பொது மக்கள் தொடர்ந்தும் கொரோனா வைரஸ் தொற்று இன்றி வாழ்வதற்கான வழியை ஏற்படுத்தவே அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்வதேயொழிய பொது மக்களை அசௌகரியப்படுத்துவதற்காகவல்ல எனவும் மர்ஜான் பளீல் இதன்போது தெரிவித்தார்.